/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., படுதோல்வி அடைய வேண்டும் விக்கிரவாண்டியில் அன்புமணி ஆவேசம்
/
தி.மு.க., படுதோல்வி அடைய வேண்டும் விக்கிரவாண்டியில் அன்புமணி ஆவேசம்
தி.மு.க., படுதோல்வி அடைய வேண்டும் விக்கிரவாண்டியில் அன்புமணி ஆவேசம்
தி.மு.க., படுதோல்வி அடைய வேண்டும் விக்கிரவாண்டியில் அன்புமணி ஆவேசம்
ADDED : ஆக 14, 2025 12:49 AM

விக்கிரவாண்டி: தமிழ்நாட்டில் வரும் 2026 தேர்தலில் தி.மு.க., தோல்வியடைய வேண்டும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நேற்று மாலை நடந்த தமிழக உரிமை மீட்பு பிரசார பயணத்தின்போது அவர் பேசியது:
2026 தேர்தலில் தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும். கடந்த மூன்று தேர்தல்களில் வாய்ப்பளித்து வெற்றி பெற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் கஞ்சா, மது போதைகளுக்கு இளைஞர்கள் அடிமையாகி விட்டார்கள். கடந்த, 2019 இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு தனியாக கொடுப்பேன் என்று கூறினார். இதுவரை தரவில்லை.
வன்னியர் சமுதாயத்தின் மீது ஏன் கோபம் என்று தெரியவில்லை. 18 சதவீதம் உள்ள வன்னியர் சமுதாயத்தில் இட ஒதுக்கீட்டில் பணி கிடைத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.
சுப்ரீம் கோர்ட் இட ஒதுக்கீடு கொடுக்க தீர்ப்பு கூறி, 1232 நாட்கள் ஆகியும் உள் ஒதுக்கீடு தரப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை தருவதில் ஏன் தாமதம் என்று தெரியவில்லை.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த 8 மாதங்களுக்கு பிறகு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், முன்னாள் நீதிபதி பாரதிதாசன் தலைமையில் அமைத்தார்கள். 3 மாதங்களில் பரிந்துரை செய்வார்கள் என்று ஆணை பிறப்பித்தார்கள். ஆனால் 30 மாதங்களாகியும் இதுவரை இட ஒதுக்கீடு குறித்து எவ்வித பரிந்துரையும் இல்லை. எனவே தமிழகத்தில் செயல்படாமல் உள்ள ஆணையத்தை கலைத்து விடலாம்.
தமிழகத்திலேயே, விழுப்புரம் மாவட்டத்தில் தான் 109 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா போதை பொருட்கள் விற்பவர்கள் எல்லாம் தி.மு.க.,வினரே.
மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் இறந்தனர். அப்போது சாராயம் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராய சாவு நடந்திருக்காது.
என்னிடம் ஆட்சியை கொடுத்தால், 6 நாட்களில் கள்ளச்சாராயத்தை கஞ்சாவை ஒழிப்பேன். தமிழக போலீசார் மிகவும் திறமையானவர்கள். அவர்களை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.
வரும் தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்ற இலக்கோடு நீங்கள் செயல்பட வேண்டும். வரும், 2026 தேர்தலில் தி.மு.க., படுதோல்வி அடைய வேண்டும். நாங்கள் இட ஒதுக்கீடு, வேலை, படிப்பு, சுயமரியாதையை தான் கேட்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பொதுசெயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலாளர் சிவகுமார் ,எம்.எல்.ஏ., உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.