/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொடர் செயின் பறிப்பு வழக்கு ஆந்திர நபர் கோவாவில் கைது
/
தொடர் செயின் பறிப்பு வழக்கு ஆந்திர நபர் கோவாவில் கைது
தொடர் செயின் பறிப்பு வழக்கு ஆந்திர நபர் கோவாவில் கைது
தொடர் செயின் பறிப்பு வழக்கு ஆந்திர நபர் கோவாவில் கைது
ADDED : ஜன 11, 2025 06:21 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர ஆசாமியை போலீசார் கோவாவில் கைது செய்தனர்.
புதுச்சேரி புதுசாரம், தென்றல் நகர், முதல் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பிரேமாவதி, 57. இவர், கடந்த ஆக., 31ம் தேதி, தென்றல் நகர் 2வது குறுக்கு தெரு வழியாக நடந்து சென்றபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள், பிரேமாவதி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து சென்றனர்.
மறுநாள் இரவு, சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்த சரஸ்வதி, 55; கடைக்கு நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இருவர், அவர் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்து சென்றனர். அதே நாளில் ரெட்டியார்பாளையம் மூதாட்டி செல்லம்மாள், கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகர், ஜீவானந்தம் வீதியில் நடந்து சென்ற உமாவதி, 52; என்ற பெண்ணிடமும் மர்ம நபர்கள் தாலி செயின் பறித்து சென்றனர்.
கோரிமேடு, தன்வந்திரி நகர் மற்றும் ரெட்டியார்பாளையம் போலீசார் செயின்பறிப்பு வழக்கு பதிந்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த துருவ்சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார், 34; என்ற வாலிபரை கடந்த செப்., 28ம் தேதி கைது செய்தனர்.
சந்தோஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம், கடப்பாவைச் சேர்ந்த பிரபல செயின்பறிப்பு ஆசாமி சையது பாஷா, 36; உடன் இணைந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.
சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கடந்த 3 மாதங்களாக சையத் பாஷாவை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கோவாவில் பதுங்கி இருந்த சையது பாஷாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில்; சையது பாஷா மீது இந்தியா முழுதும் 34 செயின்பறிப்பு, திருட்டு வழக்கு உள்ளது. 2 மாதங்கள் தொடர்ந்து கண்காணித்து சையது பாஷாவை கைது செய்துள்ளனர். இந்த கும்பல் திருட அல்லது செயின் பறிக்க சென்றால், அங்கு ஓட்டல் அறை எடுத்து தங்கி முதலில் பைக் திருடுவர். திருட்டு பைக்குகள் மூலம் இரவு நேரத்தில் செயின் பறிப்பர். சையது பாஷா மற்றும் சந்தோஷ்குமார் இருவரும் புதுச்சேரியில் 2 பைக்குகள் திருடி, 4 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்' என்றார்.