/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறையில் உள்ள தம்பதி மீது மீண்டும் மோசடி புகார்
/
சிறையில் உள்ள தம்பதி மீது மீண்டும் மோசடி புகார்
ADDED : ஜன 31, 2025 12:29 AM
புதுச்சேரி; மோசடி வழக்கில், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தம்பதி மீது போலீஸ் ஸ்டேஷனில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லித்தோப்பு, மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் செல்வி, 60; ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியர். இவரை கடந்த 2023ம் ஆண்டு நெல்லித்தோப்பு கஸ்துாரி பாய்நகரை சேர்ந்த பிளோமினா, 44; என்பவர் சந்தித்து, தான் தீபாவளி சீட்டு நடத்தி வருவதாகவும், அதில் மாதம் ரூ. 1,000 வீதம் 12 மாதங்கள் ரூ.12 ஆயிரம் செலுத்தினால், அதனுடன் ரூ. 3 ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய, செல்வி தன்னுடன் சேர்ந்து, தீபாவளி சீட்டில் 204 நபர்களையும், அதேப் பகுதியை சேர்ந்த லதா என்பவர் 70 நபர்களை சேர்த்து விட்டனர்.அதன்படி, மாதம் 274 பேருக்கு ரூ. 2 லட்சத்து 74 ஆயிரம் வீதம் 12 மாதங்கள் ரூ.32 லட்சத்து 88 ஆயிரம் பிளோமினாவிடம் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, தீபாவளி சீட்டு முடிந்து ஒரு நபருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 274 பேருக்கு 41 லட்சத்து 10 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால், பிளோமினா தீபாவளி பண்டிகை முடிந்தும் பணத்தை வழங்காமல், காலம் கடத்தி வந்தார்.
இதுகுறித்து பிளோமினாவிடம் கேட்டபோது, விரைவில் தருவதாக கூறிய நிலையில், திடீரென பிளோமினா மற்றும் அவரது கணவன் ஜான்பியர் தலைமறைவாகினர்.
இதற்கிடையே, கடந்த டிச.,17ம் தேதி முதலியார்பேட்டை போலீசார் பிளோமினா மற்றும் அவரது கணவர் ஜான்பியரை பண மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், செல்வி தன்னையும், சேர்த்து மொத்தம் 274 பேரிடம் 41 லட்சத்து 10 ஆயிரம் பண மோசடியில் ஈடுபட்டதாக பிளோமினா மற்றும் அவரது கணவர் ஜான்பியர் மீது உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

