/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விடை பெற்றது 2023; பிறந்தது 2024.. புதுச்சேரியில் கோலாகல கொண்டாட்டம்
/
விடை பெற்றது 2023; பிறந்தது 2024.. புதுச்சேரியில் கோலாகல கொண்டாட்டம்
விடை பெற்றது 2023; பிறந்தது 2024.. புதுச்சேரியில் கோலாகல கொண்டாட்டம்
விடை பெற்றது 2023; பிறந்தது 2024.. புதுச்சேரியில் கோலாகல கொண்டாட்டம்
ADDED : ஜன 01, 2024 05:46 AM
புதுச்சேரி : புதுச்சேரி நகரின் பல்வேறு இடங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்து புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர்.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாடி மகிழ உலகம் முழுதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் துவங்கிய சுற்றுலாப் பயணிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வந்தது.
இன்று புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், பீச் ரிசார்ட்டுகள் நிரம்பி வழிந்தன. கடற்கரையில், மின் விளக்குகளால் பிரம்மாண்டாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
காந்தி சதுக்கம், கலங்கரை விளக்கம், நகராட்சி கட்டடம், தலைமை செயலகம் உள்ளிட்டவை மின் விளக்குகளால் ஜொலித்தது. கடற்கரை இணைப்பு சாலைகளிலும் மின் விளக்கு அலங்காரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.
குறிப்பிட்ட இடங்களில், பிரபலங்கள் பங்கேற்ற இசை, பாடல், நடனம் உட்பட பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின. கடற்கரை மற்றும் பாண்டி மெரினாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து, கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்
கடற்கரையில், நள்ளிரவு 11:55 மணியில் இருந்தே, புத்தாண்டை வரவேற்று 'ஹாப்பி நியூ இயர்' என மகிழ்ச்சியை வெளிப்படுத்த துவங்கினர். மிகச்சரியாக, 12:00 மணிக்கு, ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி, கட்டிப்பிடித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி, புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். உற்சாக நடனமாடி, பாடல்களை பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கு தடை
முன்னதாக நேற்று பிற்பகல் 2:00 மணியில் இருந்து, ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆம்பூர் சாலையில் இருந்து கிழக்கு நோக்கி கடற்கரை செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன. மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக மருத்துவமனைக்கு செல்ல, செயின்ட் ஆஞ்சே வீதி, செஞ்சி சாலை, சூர்கூப் வீதி ஆகியவற்றில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் பொதுமக்களுக்கு சிவப்பு நிறத்திலும், தேவாலயத்திற்கு வருவோருக்கு மஞ்சள் நிறத்திலும், விடுதி உள்ளிட்டவற்றில் பணிபுரிவோருக்கு ஊதா நிறத்திலும், அடையாள அட்டைகள் அவர்களின் வாகனங்களுக்காக போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பு
கடற்கரை சாலை, செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை, பாரதி பூங்கா, சுப்பையா சாலை உள்ளிட்ட, 150 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சீனியர் எஸ்.பி., நாரசைதன்யா தலைமையில், 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநிலம் முழுதும் 6 போலீஸ் எஸ்.பி.க்கள் உட்பட 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, 100 தன்னார்வலர்கள் போலீசாரோடு இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.