/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் துவக்கம்
/
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் துவக்கம்
ADDED : அக் 29, 2024 06:33 AM

புதுச்சேரி: கலை பண்பாட்டுத்துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் 'தேசிய செழுமைக்கான கலாச்சார ஒருமைப்பாடு' தலைப்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (28 ம் தேதி) துவங்கி 30ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
இதில், நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி துவக்க விழா புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியை கலை, பண்பாட்டுத்துறையின் இயக்குனர் கலியபெருமாள் துவக்கி வைத்தார். தொடர்ந்து, தலைமைச் செயலகம், சிறுவர் பூங்கா மற்றும் ரயில்நிலையம் முன்பு விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடந்தது.
இன்று (29ம் தேதி) மாலை கோரிமேடு, இந்திராகாந்தி சதுக்கம், அந்தோணியார் கோவில் சந்திப்பு ஆகிய இடங்களிலும், நாளை (30 ம் தேதி) மாலை முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, லாஸ்பேட்டை உழவர்சந்தை மற்றும் கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் அருகிலும் நடக்கிறது.
ஏற்பாடுகளை கலை, பண்பாட்டுத்துறையின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

