/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏரியா சாலை பாதுகாப்பு கமிட்டி விரைவில்... உதயமாகிறது; போக்குவரத்து பிரச்னையில் கைகோர்க்க முடிவு
/
ஏரியா சாலை பாதுகாப்பு கமிட்டி விரைவில்... உதயமாகிறது; போக்குவரத்து பிரச்னையில் கைகோர்க்க முடிவு
ஏரியா சாலை பாதுகாப்பு கமிட்டி விரைவில்... உதயமாகிறது; போக்குவரத்து பிரச்னையில் கைகோர்க்க முடிவு
ஏரியா சாலை பாதுகாப்பு கமிட்டி விரைவில்... உதயமாகிறது; போக்குவரத்து பிரச்னையில் கைகோர்க்க முடிவு
ADDED : மே 23, 2025 06:39 AM

புதுச்சேர: புதுச்சேரி நகரின் போக்குவரத்து பிரச்னையை தீர்க்கும் வகையில் ஏரியா சாலை பாதுகாப்பு குழு ஏற்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி நகர வீதிகள் அனைத்தும் பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி அல்லோலப்படுகிறது. சாலையில் புற்றீசல் போல் கடைகள் முளைத்து வருகின்றன. அகலமான சாலைகள் அனைத்தும், சந்துகள்போல் குறுகிபோய் உள்ளன. பெரும்பாலான நகர சாலைகளில் நடைபாதையை காணவில்லை. நடைபாதைகளில் கடைகள் தான் உள்ளன.
சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் தலைமையில் அனைத்து துறைகளும் உள்ளடங்கிய மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி உள்ளது. இந்த கமிட்டி அட்டவணை போட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் மறுநாளே அதே இடத்தில் கடைகளை கொண்டு வந்து வைக்கின்றனர். இதற்கு முடிவே இல்லாமல் தொடர்கதையாக உள்ளது.
நகரின் தலைவலியாக உள்ள போக்குவரத்து பிரச்னையை தீர்க்கும் வகையில் டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவின்பேரில், காவல் துறை புது முயற்சி ஒன்றை துவக்க திட்டமிட்டு வருகிறது.
பல்வேறு தரப்பினரும் உள்ளடங்கிய ஏரியா சாலை பாதுகாப்பு கமிட்டி ஒன்றை அந்தந்த போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த கமிட்டியில் போக்குவரத்து, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை, வருவாய், உள்ளாட்சி, மின்துறை, சுகாதார அதிகாரிகள் இடம் பெற உள்ளனர்.
அடுத்து அந்தந்த பகுதியில் உள்ள மார்க்கெட் வியாபாரிகள், வியாபார சங்கங்கள், கோவில், சர்ச், மசூதி நிர்வாகிகள், பஸ் லாரி, டிரக், ஆட்டோ, டெம்போ சங்க நிர்வாகிகள், சிவில் சொசைட்டி, தன்னார்வ அமைப்புகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்.
இளைஞர், மகளிர் சுய உதவி குழுக்கள், ஊடகம், சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள், மேலாளர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், கல்லுாரி, பள்ளி முதல்வர்கள், இயக்குநர்கள், ஓட்டுநர் பழகுநர் உரிம பள்ளிகள், வாகன விற்பனை நிலையங்கள், டூவிலர் வாடகை நிலை நிர்வாகிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த ஏரியா சாலை பாதுகாப்பு கமிட்டி மாதம் ஒருமுறை கூடும். அந்தந்த பகுதியில் நடந்த சாலை விபத்துகள், அதற்கான காரணங்கள், சாலை விதிமுறைகள் மீறல்கள் ஆக்கிரமிப்புகள், பார்க்கிங் பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து பிரச்னைகளை குறித்தும் விவாதித்து தீர்வுகளை கண்டறியும்.
மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க எந்த சாலைகளை ஒரு வழிபாதை, ஒரு பக்க பார்க்கிங்காக மாற்றலாம். வர்த்தக கடைகளுக்கு வரும் கனரக வாகனங்களின் நேரத்தை வரையறைப்படுத்துவது. இது தவிர சாலையின் தரம், ரோடு மார்க்கிங், வேகத் தடை, சாலை அகலப்படுத்தல், சுரங்கப் பாதை, போக்குவரத்து வழிகாட்டி எங்கு அமைக்கலாம் என்பதையும் அந்த ஏரியா கமிட்டி ஆய்வு செய்து, போக்குவரத்து சீனியர் எஸ்.பி., வழியாக டி.ஜி.பி.,க்கும், மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டிக்கும் ஒவ்வொரு மாதம் 5ம் தேதிக்குள் அனுப்பி வைக்கும்.
இந்த ஏரியா சாலை பாதுகாப்பு கமிட்டியில் உறுப்பினர்களை சேர்க்க பொதுநலனில் அக்கறை உள்ளவர்களை கண்டறியும் பணியில் அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து ஸ்டேஷன்கள் ஈடுபட்டுள்ளன.
போக்குவரத்து பிரச்னைகள் வழக்கமாக அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசித்து நடைமுறைப்படுத்தப்படும். தற்போது முதல் முறையாக அடிமட்டத்தில் இருந்து அனைத்து தரப்பினருடன் கைகோர்த்து போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.