/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபையில் மத்திய அரசு திட்டங்கள் தொடர்பாக வாக்குவாதம்: தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடும் மோதல்
/
சட்டசபையில் மத்திய அரசு திட்டங்கள் தொடர்பாக வாக்குவாதம்: தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடும் மோதல்
சட்டசபையில் மத்திய அரசு திட்டங்கள் தொடர்பாக வாக்குவாதம்: தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடும் மோதல்
சட்டசபையில் மத்திய அரசு திட்டங்கள் தொடர்பாக வாக்குவாதம்: தி.மு.க., - பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடும் மோதல்
ADDED : ஆக 02, 2024 12:36 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பா.ஜ., மற்றும் தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று (ஆக., 01)நடந்த விவாதத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ., பேசினார்.
அசோக்பாபு:
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் போன்றவற்றின் மூலமாக விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் மூலம் 1.91 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருள் மானியம் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்த திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் பட்டியல், நிதி ஒதுக்கீடு குறித்து ஒவ்வொரு துறையிலும் தகவல் பலகை அமைக்க வேண்டும்.
எதிர்கட்சி தலைவர் சிவா
அப்படியே, புதுச்சேரியில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி., வருமான வரி, துறைமுகம் மூலம் கிணற்றில் போடப்பட்ட நிதி உள்ளிட்டவற்றையும் பட்டியலிடுங்கள். மத்திய அரசின் திட்டங்களால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.
நாஜிம்:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
அசோக்பாபு:
மத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் புதுச்சேரி முழுதும் உள்ளது. அந்த மருந்தகத்தில் நாஜிம்கூட மருந்து வாங்கி சாப்பிடுகிறார்.
நாஜிம்:
ரெஸ்டோ பார் மருந்தா?
அசோக்பாபு:
பிரதமரின் விவசாய உரக்கடை திட்டம், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் போன்றவையும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பயனளிக்கும் திட்டங்களாகும். தேசிய உயர்கல்வி திட்டத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ. 8 கோடிக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை நாங்கள் வெளிப்படுத்தாத காரணத் தினால் பொய் சொல்வதாக கூறுகிறீர்கள். பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு ரூ 10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
நாஜிம்:
எல்லாவற்றிலும் பொய் சொல்ல நாங்கள் என்ன கவர்னரா? ஆயுஷ்மான் பாரத் குறித்து அரை மணி நேரம் விவாதம் செய்ய தயாரா?
சிவா:
1996ம் ஆண்டு,வியாபாரிகளுக்கு கடனாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.10 ஆயிரம் கொடுத்துவிட்டு அதனை பெருமைப்படுத்தி பேசாதீர்கள். படித்த இளைஞர்களுக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை. காதி, ஆதிதிராவிடர், மகளிர் மேம்பாட்டு துறைகளில் கடன் கொடுப்பது கிடையாது.
சபாநாயகர் செல்வம்:
கடந்த ஆட்சியில் கடன் வாங்கியவர்கள் திரும்ப தரவில்லை. அதனை திருப்பி வாங்கவும் யாரும் முயற்சி செய்யவில்லை. சம்பத் எம்.எல்.ஏ., தனது தொகுதிக்கு அனைத்து திட்டங்களையும் கொண்டு சென்றுவிட்டு அரசு எதுவும் செய்யவில்லை என பேசுகிறார்.
அமைச்சர் நமச்சிவாயம்:
மனசாட்சியோடு பேசுங்கள். அரசிடம் நிதி பெற்று திட்டங்களை செய்து விட்டுஅவர்கள் செய்ததாக கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இதையடுத்து, சபையில் தி.மு.க., பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
அசோக்பாபு:
விருந்து பரிமாறும் போது இலையைபோட்ட உடன்ஒரே நேரத்தில் அனைத்தையும் வைக்க மாட்டார்கள். அப்பளம், பொறியல், கூட்டு என வைத்துவிட்டு சாதம் வைப்பார்கள்.
பின், குழம்பு, சாம்பார், ரசம், மோர் என பரிமாறப்படும். அதுபோல மத்திய அரசும் புதுச்சேரிக்கு ஒவ்வொன்றாக அனைத்தையும்கண்டிப்பாகவழங்கும்.
சபாநாயகர் செல்வம், இரு தரப்பையும் சமாதானம் செய்து அடுத்த அலுவலுக்கு சென்றார்.