ADDED : ஆக 22, 2026 05:50 PM
ஆறுமுகம் படம்
மீண்டும் அரசு கொறடா வழங்கியதால் கடும் அதிருப்தியில் ஆறுமுகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்., –12, பா.ஜ., – 4, அ.தி.மு.க., ல.ஜ.க. தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்று மொத்தம் 18 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். இதில், முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்ததால் தற்போது இந்த கூட்டணிக்கு 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அமைச்சர்களுக்கு பதவி மற்றும் இலாகா பல கட்ட இழுபறிக்கு பின், ஒரு வழியாக வழங்கப்பட்டது.
இதில், என்.ஆர்.காங்., தரப்பில் முதல்வராக ரங்கசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். பா.ஜ., சார்பில் நமச்சிவாயம், ராஜசேகர் அமைச்சர்களாக உள்ளனர். தற்காலிக சபாநாயகராக அன்பழகன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த முறை வழங்கியது போன்று பா.ஜ.,விற்கு சபாநாயகர் பதவியும் வேண்டும் என கேட்டு முதல்வர் ரங்கசாமிக்கு தற்போது வரை பா.ஜ., மேலிடம் கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், பா.ஜ.,விற்கு சபாநாயகர் பதவியை தருவதற்கு விரும்பாமல் முதல்வர் ரங்கசாமி மவுனம் காத்து வருவதாக என்.ஆர்.காங்., தரப்பில் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., ஆறுமுகத்திற்கு மீண்டும் பழையபடியே அரசு கொறடா பதவி வழங்கப்பட்டது, அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. என்.ஆர்.காங்.,கில் 2வது முறையாக வெற்றி பெற்றதால், அமைச்சர் பதவி அல்லது துணை சபாநாயகர் பதவி கிடைக்கும் என காத்திருந்த ஆறுமுகத்திற்கு அரசு கொறடா அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
இதனால் கொறாட பதவி தனக்கு வேண்டாம் என நேரடியாக முதல்வர் ரங்கசாமியிடம் அவர் கூறியதாகவும், அவரை முதல்வர் சமாதானப்படுத்தி தற்காலிகமாக இந்த அரசுக் கொறாடாவை ஏற்றுக் கொள்ள வேண்டும். பட்ஜெட் தாக்கல் முடிந்த பின்பு நல்ல பதவி வழங்கப்படும் என கூறியதாக என்.ஆர்.காங்., கட்சியினர் கூறுகின்றனர்.
ஏற்கனவே சபாநாயகர் பதவி வழங்காததால் பா.ஜ., தரப்பு எரிச்சலில் உள்ள நிலையில், 11 எம்.எல்.ஏ., க்கள் உள்ள என்.ஆர்.காங்., கட்சியில் முதல்வர் ரங்கசாமி, 3 அமைச்சர்கள் என மொத்தம் 4 பேர் மட்டுமே பதவியில் உள்ளனர். மற்ற 7 பேர் பதவி இல்லாமல் உள்ளனர். இதில் பதவி கிடைக்காத சில எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தியில் உள்ளதை எப்படி சரிக்கட்ட போகிறார் முதல்வர் ரங்கசாமி?
