‘தட்டாஞ்சாவடியில் போட்டியிட்டு அசோக் ஆனந்த் வெற்றி பெறுவார்’
‘தட்டாஞ்சாவடியில் போட்டியிட்டு அசோக் ஆனந்த் வெற்றி பெறுவார்’
ADDED : செப் 05, 2026 11:22 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் ஜக்கு சின்னத்தில் போட்டியிட்டு அசோக் ஆனந்தன் வெற்றி பெறுவார் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில், மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும் வகையில், ஸ்ரீமதி விஜயலட்சுமி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தன் ஏற்பாட்டில் 16ம் ஆண்டு கல்வித்திறன் பரிசளிப்பு விழா, இ.சி.ஆரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, தட்டாஞ்சாவடி தொகுதியில், மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 296 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, பேசியதாவது;
மாணவர்கள் தொடர்ந்து சிறப்பாக கல்வி பயின்று, உயர் கல்வியில் சிறந்து விளங்கி, தங்களது குடும்பத்திற்கும், தட்டாஞ்சாவடி தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். எனது எண்ணத்தை அசோக் ஆனந்தன் தட்டாஞ்சாவடி தொகுதியில் நிறைவேற்றி வருகிறார்.
மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்தன் தேர்தலில் போட்டியிட்டு ஜக்கு சின்னத்தில் வெற்றி பெறுவார். அவர், தொகுதி மக்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்வார்’ என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தன் கூறுகையில், ஸ்ரீமதி விஜயலட்சுமி அம்மாள் அறக்கட்டளை சார்பில், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
அதன்படி அறக்கட்டளை சார்பில், வழங்கப்படும் அடையாள அட்டையை பயன்படுத்தி, தட்டாஞ்சாவடி தொகுதியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள் தொடர்ந்து வழங்கப்படும்’ என்றார்.
