/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.டி.எம். மிஷினை உடைத்து ரூ. 6 லட்சம் கொள்ளை
/
ஏ.டி.எம். மிஷினை உடைத்து ரூ. 6 லட்சம் கொள்ளை
ADDED : ஜன 06, 2025 04:54 AM

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா மேலசாலை கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் இந்தியன் வங்கியும் அதன் வாயில் அருகே ஏ.டி.எம். மையமும் உள்ளன. இந்த வங்கி மற்றும் ஏ.டி.எம். மையத்திற்கு செக்யூரிட்டி ஆட்கள் நியமிக்கப்படவில்லை.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த ஏ.டி.எம். மிஷினில் ரூ. 15 லட்சம் பணம் நிரப்பப்பட்டதாகவும் நேற்று முன்தினம் இருப்பு சரிபார்த்த போது ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அலாரம் மற்றும் மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு, ஏ.டி.எம். மெஷினை கடப்பாரை கொண்டு உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று காலை பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம். மெஷின் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து, மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஏ.டி.எம். தொழில்நுட்ப பிரிவினர் வந்து மெஷினை திறந்து சோதனை செய்த போது 4 டிரேக்களில் வைக்கப்பட்டிருந்த பணத்தில் ரூ 6 லட்சத்து 8 ஆயிரத்து 600 பணம் கொள்ளை அடிக்கப்பட்டு, மீத தொகை ட்ரேக்களில் சிதறி கிடந்ததும் தெரிய வந்தது.
கொள்ளையர்களை பிடிக்க, சீர்காழி டி.எஸ்.பி., ராஜ்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.