ADDED : ஜூன் 26, 2025 12:59 AM
பாகூர் : பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியரை தாக்கி, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 50. இவர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் வரி வசூல் பிரிவில் பணி செய்து வருகிறார். இவர் கடந்த 23ம் தேதி, தனது பைக்கில், சொத்து வரி கணக்கீடு பணி தொடர்பாக சேலியமேடு கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாகூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் காத்தவராயன் மற்றும் இரண்டு பேர், மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் இளையவளவன் ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல் ராஜாவை வழி மறித்து பைக்கை எட்டி உதைத்தனர்.
தொடர்ந்து, அந்த கும்பல், ராஜாவிடம், எங்களுக்கு எதிராக நீ சங்கம் வளர்க்கிறாயா? என கேட்டு, ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
ராஜா, அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நான்கு பேர் மீது, பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.