/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பள்ளி நிர்வாக அதிகாரி மீது தாக்குதல்
/
தனியார் பள்ளி நிர்வாக அதிகாரி மீது தாக்குதல்
ADDED : ஏப் 14, 2025 04:22 AM
பாகூர்:தனியார் பள்ளி நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உறவினர் மீது தாக்குதல் நடத்தி, நகை பறித்துச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் ராஜராஜன் 52; அங்குள்ள தனியார் பள்ளியின் தாளாளர். இவரது மகன் அருள்ராஜ் வல்லவன், அதே பள்ளியின் நிர்வாக அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். அருள்ராஜ் வல்லவன், கடந்த 11ம் தேதி இரவு சென்னையில் இருந்து புதுச்சேரி வந்திருந்த தனது உறவினர் மகன் சூரியபிரகாஷ் என்பவரை காரில் அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பிள்ளையார்குப்பத்தில் உள்ள கடையில் காரை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடித்தனர். அங்கு வந்த சிலர், காரின் மீது மோதுவது போல் வந்து பைக்குகளை நிறுத்தினர். அவர்களிடம், அருள்ராஜ் வல்லவன் பைக்கை கொஞ்சம் தள்ளி நிறுத்துங்கள் என, கூறினார். ஆத்திரமடைந்த அந்த கும்பல் அருள்ராஜ் வல்லவன், சூரியபிரகாஷ் மீதும் தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
சூரியபிரகாஷ் அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்து கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அருள்ராஜ் வல்லவன் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கத்தை சேர்ந்த சந்துரு, கன்னியக்கோவில் அண்ணாமலை உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

