தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணப்பட்டு ஏரியில் மரங்களை வெட்டி கடத்த முயற்சி

 மணப்பட்டு ஏரியில் மரங்களை வெட்டி கடத்த முயற்சி

 மணப்பட்டு ஏரியில் மரங்களை வெட்டி கடத்த முயற்சி


ADDED : ஏப் 20, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 06:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: மணப்பட்டு ஏரியின் கரை பகுதியில் இருந்த மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியக்கோவில் - பாகூர் சாலையில் மணப்பட்டு தாங்கல் ஏரி அமைந்துள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு, அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஏரி கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புளியம், பென்சில், துாங்கு மூஞ்சு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை கொண்டு, இயற்கை சூழலுடன் ஒரு அடர்ந்த வன பகுதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர், மணப்பட்டு ஏரியில் கரை பகுதியில் இருந்த காய்ந்த மற்றும் உயிருள்ள மரங்களை, இயந்திரம் மூலமாக அடியோடு அறுத்து, அதனை பல துண்டுளாக ஆக்கி, கடத்தி செல்ல முயன்றனர்.

தகவலறிந்த பொது மக்கள், அங்கு சென்று கேள்வி கேட்ட போது, அதற்கு மரத்தை வெட்டியவர்கள், நாங்கள் பொதுப்பணித்துறையில் ஏலம் எடுத்து தான் மரங்களை வெட்டினோம் என, பதில் கூறுவது, பொது மக்கள் பதிவு செய்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ, தற்போது சமூக வலை தளங்களில் பரவியதை தொடர்ந்து வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு பல புகார்கள் சென்றது. இதையடுத்து, பாகூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகம் சார்பில், இச்சம்பவம் குறித்து, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், போலீசார், மணப்பட்டு ஏரியில் மரங்களை வெட்டியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணப்பட்டு ஏரியில் தொடர்ந்து மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால், இயற்கை சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. மரம் வெட்டியவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us