ADDED : ஏப் 22, 2026 08:17 PM
புதுச்சேரி: மூலக்குளம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூலக்குளம் எம்.ஜி.ஆர்.நகர், 2வது மெயின் ரோட்டைச் சேர்ந்த பால் மரிய நோயில் மனைவி மனோரஞ்சிதகுமாரி, 43; ஜிப்மர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். இவர், கடந்த 14ம் தேதி இரவு வழக்கம் போல் தனது குடும்பத்துடன் வீட்டில் துாங்கியுள்ளார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.
ஆனால், பீரோவில் நகை மற்றும் பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மனோரஞ்சிதகுமாரியின் கார் கண்ணாடியை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
அதேபோல், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் ஜித்தேஷ் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளார். அங்கும் பணம் ஏதும் கிடைக்காத விரக்தியில், மொபைல் போனை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
