பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் நாளை 3 இடங்களில் விழிப்புணர்வு முகாம்
பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் நாளை 3 இடங்களில் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 09, 2026 07:59 AM
புதுச்சேரி: பிரதமரின் சூரிய மின்னொளி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம், நாளை புதுச்சேரி உள்ளிட்ட மூன்று இடங்களில் நடக்கிறது.
இதுகுறித்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையும் இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வீடுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒரு கிலோ வாட்டிற்கு ரூ. 30 ஆயிரமும், 2 கிலோ வாட்டிற்கு ரூ. 60 ஆயிரமும், 3 கிலோ வாட்டிற்கு ரூ.78 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்கி வருகிறது.
இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,263 மின் நுகர்வோர் தங்கள் வீடுகளில் சூரிய மின் திட்டத்தை அமைத்துள்ளனர். இவர்களுக்கு ரூ.15.73 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிடும் பொருட்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாளை 10ம் தேதி புதுச்சேரி, திருவள்ளுவர் நகர், பாரதி வீதியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சுவாமிகள் திருமண மண்டபம், வடமங்கலத்தில் ஸ்ரீ கவுசல்யா மகாலிலும், சேதராப்பட்டில் ஜே.வி.எம்., மகாலிலும் காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
முகாமில், திட்டத்தின் சிறப்புகள், செயல்முறை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். மேலும், முகாமில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விபரம் வேண்டுவோர், 94890 80373 அல்லது 94890 80374 ஆகிய மொபைல் போன் எண்களில் அல்லது ee2ped@py.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
