/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆயுத பூஜை கொண்டாட்டம் பூக்கள் விலை கிடு கிடு
/
ஆயுத பூஜை கொண்டாட்டம் பூக்கள் விலை கிடு கிடு
ADDED : அக் 11, 2024 06:10 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுதபூஜை கொண்டாட்டத்தையொட்டி, பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச் சேரியில் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க புதுச்சேரியில் நேரு வீதி, பாரதி வீதி, கொசக் கடை வீதி, முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, லாஸ் பேட்டை, சாரம், நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.
பூக்களின் விலை வழக்கம் போலவே, இந்தாண்டு உச்சத்தை எட்டி உள்ளது. நேற்றைய நிலவரப்படி, அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு, மல்லிகை ரூ.600. கனகாம்பரம் ரூ.2000, சாமந்தி ரூ.300, ரோஜா 360, அரளி ரூ.300, வரை விற்பனை செய்யப்பட்டது.
வரத்து குறைவால் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல, பொரி, கடலை, வெல்லம், அவல் ஆகியவை இணைத்து மொத்தமாக, ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளை பூசணி ஒன்று குறைந்தபட்சமாக, ரூ.100 வரை விற்பனையானது. ஆப்பிள், சாத்துக்குடி உள்ளிட்ட பழவகைகள் வாழைக்கன்றுகள், அலங்கார தோரணங்கள், பரிசு பொருட்களின் விலையும் அதிகரித்தாலும், விற்பனை களைகட்டியது.