/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் மூலநாதர் கோவில் மகா சிவராத்திரி சிறப்பு மலர்
/
பாகூர் மூலநாதர் கோவில் மகா சிவராத்திரி சிறப்பு மலர்
பாகூர் மூலநாதர் கோவில் மகா சிவராத்திரி சிறப்பு மலர்
பாகூர் மூலநாதர் கோவில் மகா சிவராத்திரி சிறப்பு மலர்
ADDED : பிப் 14, 2026 04:30 AM

பாகூர் வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவில்
மகா சிவராத்திரி விழா; நாள் 15.02.2026, நேரம் மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை.
பாகூர் மூலநாதர் கோவிலில் வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கி வளமான வாழ்வு அமையும்
புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூரில் உள்ள, சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற, 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில், சிவ பெருமான் சுயம்பாக லிங்க வடிவில், 'மூலநாதர்' என்ற நாமத்திலும், அம்பாள் 'வேதாம்பிகையம்மன்' என்ற பெயரிலும் அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவில், முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க, மூலநாதர் கோவில் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு முன்பாக கட்டப்பட்டது. இக்கோவிலில், சோழர் மற்றும் பல்லவர் கால சிற்பக்கலை நுணுக்கங்களைக் கொண்டு, கருவறை, அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபத்துடன் அமைந்துள்ளது. கோவிலில், ஏராளமான கல்வெட்டுகளும், சிற்பங்கள் உள்ளன.
இக்கோவிலின் புணரமைப்புக்கு சோழர்கள் மற்றும் பல்லவர்கள் அவரவர் ஆட்சி காலத்தில் உரிய பங்களிப்பு செய்துள்ளனர். தற்போது, இக்கோவில், இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டிலும், புதுச்சேரி இந்து சமய அறநிலைத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
பாகூர் ஏரிக்கும் இக்கோவிலுக்குமான தொடர்பு இருந்துள்ளது.
முந்தைய காலங்களில், பாகூர் ஏரியில் இருந்து வாய்க்கால் வழியாக கோவிலுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அந்த தண்ணீரை கொண்டு சுவாமிக்கு அபிேஷகம் செய்து வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
பாகூர் ஆன வாகூர்; கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி, இக்கிராமத்தில் பழங்காலப் பெயர் வாகூர் ஆகும். சோழர் காலத்தில் இந்த கிராமம் அழகிய சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டு, வாகூர் என்றும் தற்போது, பாகூர் என மருவி உள்ளது.
மகா சிவராத்திரி மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம், ஆண்டு தோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். அன்றைய தினம் சிவனை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றி் ஏற்படும்.'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் .
அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் மகா சிவராத்திரி விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.
செப்பேட்டு கல்வெட்டுகள்: பாகூரில் கடந்த 1879ம் ஆண்டு இக்கோவிலுக்கு அருகில், ஒரு செப்பேட்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இது காஞ்சிபுரத்தின் கடைசி பல்லவப் பேரரசர்களில் ஒருவரான நிருபதுங்க வர்மனின் ஆட்சியின் 8 ம் ஆண்டை சேர்ந்தது. இந்த கல்வெட்டு, பாகூரில் இருந்த 'வித்யாஸ்தானம்' என்றழைக்கப்படும் ஒரு கல்வி நிலையத்துக்கு வழங்கப்பட்ட கல்வி மானியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
மூலநாதர் - வேதாம்பிகையம்மன்: இக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி உள்ள மூலநாதர், பிரம்மஹஸ்தி தோஷத்தை நீக்கி அருள் பாலித்து வருகிறார். இவரை வணங்குவதன் மூலமாக, சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும். வேதாம்பிகையம்மன், தெற்கு திசை பார்த்து தாமரை மலர் பீடத்தின் மீது நின்ற படி, கையில் தாமரை மொட்டுடன், தட்சிணாமூர்த்தி சொரூபிணியாக அருள் பாலித்து வருகிறார். தாமரை மலர், தெய்வத்தன்மை, தூய்மை மற்றும் ஞானத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், வேதங்கள் மற்றும் ஞானத்தின் தாயாக வேதாம்பிகையம்மன் போற்றப்படுகிறாள்.
மகாலட்சுமியின் உறைவிடமாகவும் தாமரை மலர் புகழப்படுவதால், அதன் மீது நின்ற கோலத்தில் காட்சி தரும் வேதாம்பிகையம்மனை வணங்குவது செல்வம் மற்றும் வளத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.
16 செல்வங்களை வழங்கும் வேதாம்பிகை அம்மன் மேலும், இங்குள்ள வேதாம்பிகையம்மனுக்கு முன்று கண்களுடன் சிவ அம்சமாக விளங்கி வருவதால், அவரையும், மூலநாதரையும் ஒரே சமயத்தில், அதுவும் மகா சிவராத்திரி தினத்தில் வழிபடுவதன் மூலமாக, புகழ், கல்வி, வீரம், வெற்றி, குழந்தை, துணிவு, செல்வம், தானியம், இன்பம், ஞானம், அழகு, சிறப்பு, குடியிருப்பு, நோயில்லாமை, நல்மனம், நீண்ட ஆயுள் என பதினாறு செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருச்சோபனமுடையார்; முதல் பராந்தக சோழனின் மனைவிக்கு சரும நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதை நிவர்த்தி செய்ய மூலநாதப் பெருமானை வேண்டிக்கொண்டார். ஒரு நாள் இரவு ராணியின் கனவில் சுவாமி தோன்றி, எனது இடப் பக்கத்தில் திருச்சோபனமுடையார் லிங்கத்தை தோற்றுவித்து அதற்கு பூஜை செய்து வந்தால் உன்னுடைய நோய் தீரும் என்று கூறினார். ராணியும் இறைவனின் கட்டளையை ஏற்று, திருச்சோபனமுடையார் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரவே, ராணியின் சரும நோய் விலகியதாக கூறப்படுகிறது.
விமோச்சனமுடையார்; இக்கோவிலில் தெற்கு பகுதியில் தனி சன்னிதி கொண்டு மேற்கு நோக்கி லிங்க வடிவில் விமோச்சனமுடையார் அருள் பாலித்து வருகிறார். மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இவரை வழிபடுவதன் மூலமாக, பாவ விமோசனம் கிடைப்பதாகவும், கடன் மற்றும் வறுமை நீக்கி வாழ்க்கை செம்மையாகும்.
குழந்தை பாக்கியத்தை அருளும் பால விநாயகர்;
இக்கோவிலின் மூலவர் மண்டபத்தின் தெற்கு வெளிப்புற சுவற்றில், பால விநாயகர் கையில் கரும்பு, வாழைப்பழம், மாம்பழம் வைத்த படி அருள்பாலித்து வருகிறார். சங்கடஹர சதுர்த்தி தினத்தில், பால விநாயகருக்கு, பால், தேன் அபிேஷகம் செய்து வழிபட்டதால், குழந்தை பேறு, கல்வி செல்வம், வெற்றி, மன அமைதியும், தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
பாடல் பெற்ற ஸ்தலம் ; திருஞானசம்மந்தர் பல சிவலாயங்களுக்கு சென்று பதிகப் பாடல்களைப் பாடியுள்ளார். அந்த வகையில், புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலிலும், ஞானசம்மந்தர் பாடல்களை பாடி உள்ளார். இக்கோவில், பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில், அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வடக்கு திசையில் கிழக்கு பார்த்து, திருஞானசம்மந்தர் தனி சன்னிதி கொண்டுள்ளார்.
பொங்கு சனி பகவான்; இத்தலத்தின் வடக்கு பகுதியில், மேற்கு திசை பார்த்து பொங்கு சனி பகாவன் கலப்பை, காக்கை மற்றும் கையில் கமண்டலத்துடன் சிவனை நோக்கித் தவம் செய்து பாவ விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி, பொங்கு சனி பகவானை வழி பட்டால், ஏழரைச் சனியின் இரண்டாவது கட்டமான பொங்கு சனி காலத்தில், தீய விளைவுகள் குறைந்து, வளர்ச்சி, செல்வம் மற்றும் இன்பத்தை அளிக்கும் என்பது ஐதீகம்.
நந்தியம் பெருமான்கள்; இக்கோவிலின், மூலவர் கோபுரத்தில், நந்தி தேவரின் வெவ்வேறு அவதாரங்களாக இந்திர நந்தி, பிரம்ம நந்தி, விஷ்ணு நந்தி, தரும நந்தி, அர்த்த மண்டபத்தில் ஆத்ம நந்தி, ரிஷப நந்தி, மூலவர் எதிரே அதிகார நந்தி மற்றும் கொடிமரம் எதிரே வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள்பாலிக்கும் செல்வ நந்தி பெருமான் என மொத்தம் 8 நந்தி பெருமான்கள் அருள் பாலித்து வருவது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டின் போது, நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல், மாட்டு பொங்கல் அன்று செல்வ நந்தி உள்ளிட்ட 8 நந்தி பெருமான்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிரதோஷ வழிபாட்டின் போது, செல்வ நந்தி பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவபெருமானை தரிசிப்பது, கடன் நிவர்த்தி, நற்குணங்கள், முக்தி பேறு கிடைக்கும்.
கால பைரவர் ; சிவபெருமானின் உக்கிரமான ருத்ர ரூபமாகவும், காலத்தைக் கட்டுப்படுத்துபவராகவும் கால பைவரர் போற்றப்படுகிறார். இக்கோவிலில், வடகிழக்கு திசையில், மேற்கு பார்த்து நின்ற கோலத்தில், நாய் வாகனத்துடன், சூலம், அங்குசம் ஏந்தி கால பைவரர் காட்சி தருகிறார். தீய சக்திகள், செய்வினை, பயம் நீக்கி, தலைவிதியை மாற்றும் வல்லமை படைத்த இவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில், சிறப்பு வழிபாடு மிகவும் சிறப்பான முறையில் நடைபெறும்.
பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால், வேண்டுதல் நிறைவேறும்.
ஸ்தல விருச்சம்; ராமபிரான் ராவணனை நோக்கி போர் தொடுக்கப் போகும் முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாகவும், வள்ளியை மணப்பதற்காக முருகன் வன்னி மர வடிவில் காட்சியளித்ததாகவும், பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக, தங்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். வன்னி மரத்திற்கு தெய்வீக தன்மை உள்ளது. பாகூர் மூலநாதர் கோவிலின் ஸ்தல விருச்சமாக இருப்பது வன்னி மரம் தான். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் வேண்டுவோர், மனநலம் குன்றியவர்கள், இக்கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள நந்தவனத்தில் இருக்கும் வன்னி மரத்தை சுற்றி வந்து வழிபட்டால், மூலநாதரின் அருளால் அவர்களின் பிரச்னைகள் தீரும்.
திருவிழாக்கள் ஆனி: 10 நாள் பிரம்மோற்சவம்
ஆடி: ஆடிப்புரம
ஆவணி: சிவன் பிட்டுக்கு மண் சுமந்த ஐ தீக நிகழ்வு
புரட்டாசி: நவராத்திரி
ஐப்பசி: பவுர்ணமியில் அன்னாபிேஷகம்,
கார்த்திகை : 1008 சங்காபிேஷகம்
மார்கழி: ஆருத்ரா தரிசனம், தனுார் மாத பூஜைகள்,
தை: உத்திராயண புண்ணிய கால பூஜை
மாசி: மகா சிவராத்திரி, பவுர்ணமி தினத்தில் சுவாமி கடல் தீர்த்தவாரிக்கு புறப்பாடு.
பங்குனி: உத்திரம்
சித்திரை: சித்ரா பவுர்ணமி, அக்னி நட்சத்திர தோஷம் நிவர்த்தி அபிேஷகம்
வைகாசி: விசாகம் சிறப்பு பூஜை
மேலும், சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, அதுமட்டுமின்றி, மாதம் தோறும் பிரதோஷம், மகா சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி தினங்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
நடைதிறக்கும் நேரம் இக்கோவில், காலை 6.00 மணி முதல் 10.45 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.45 மணிவரை நடை திறந்திருக்கும்.
அருள்மிகு வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவில், பாகூர், புதுச்சேரி மாநிலம். அர்ச்சகர்கள் தொடர்பு எண்; 9894376520, 9361714099, நிர்வாக அதிகாரி தொடர்பு எண்; 9047405662
திருக்கோவில் அமைவிடம்:
கடலுாரில் இருந்து 10 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 23 கி.மீ., தொலைவில் பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் அமைந்தள்ளது. இவ்விரு ஊர்களில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.

