/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
/
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
ADDED : ஜூன் 12, 2025 12:25 AM

உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்களில் திரிகோண ஆசனம், பர்ஷவகோண ஆசனம் மற்றும் மாறுபட்ட திரிகோண ஆசனங்களின் செயல்முறைகளை இந்த வாரம் பார்ப்போம்.
திரிகோண (அ) முக்கோண ஆசனம்
மூச்சை உள்ளிழுத்தபடி குதித்து கால்களை 2 அல்லது இரண்டரை அடி அகலத்திற்கு கொண்டு வரவும். கைளை பக்கவாட்டில் நேர்க்கோடு போன்று நீட்டவும். மார்பை நீட்டியபடி, விலா கூட்டை நன்கு விரிக்கவும்.
இந்த நிலையில் மூச்சை அடக்கவும். தலை மற்றும் வலது காலை ஒரே நேரத்தில் வலது பக்கமாக திருப்பவும். இடது கால் முன்னோக்கி இருக்கும். மூச்சை வெளியிட்படி கீழே வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது கால் அருகே தரையில் வைத்து, இடது கையே தலைக்கு மேல் துாக்கி உள்ளங்கை முன்னோக்கி இருக்குமாறு வைத்து மேலுள்ள கையை பார்க்கவும். இந்நிலையில் உடல் முக்கோண வடிவில் இருக்கும். நீண்ட சுவாசத்துடன் 10 வரை எண்ணவும்.
பின் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மேலெழுந்து, மூச்சை அடக்கி தலை மற்றும் வலது காலை நேரே கொண்டு வந்து, பின் தலை மற்றும் இடது காலையும் இடப்பக்கம் திருப்ப வேண்டும். மூச்சை வெளியிட்டபடி கீழே குனிந்து இடது கையை, இடது கால் அருகில் தரையில் வைத்து, வலது கையே மேலே நீட்டி, உள்ளங்கையை பார்க்கவும். 10 வரை எண்ணிக்கை வரை இந்நிலையில் இருந்து மேலெழுந்து இடது காலையும், தலையையும் நேரே திருப்பி சமஸ்திதி நிலைக்கு குதித்தபடி வரவும்.
இந்நிலையில் மூச்சை நீண்டு சுவாசிக்கவும். ஒவ்வொரு பக்கத்திற்கும் இரு முறை திரும்ப செய்யவும்.
பர்ஷவகோண ஆசனம்
சமஸ்திதி நிலையில் இருந்து எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு குதித்து கால்களை அகலப்படுத்தவும். கைகளை பக்கவாட்டில் நீட்டவும். கைகள், தோள்கள் மற்றும் மார்புப்பகுதி ஒரே நேர்கோட்டில் எந்த அளவிற்கு விரிக்க முடியுமோ அந்த அளவிற்கு விரித்தபடி, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே வலது காலையும், தலையையும் வலது பக்கம் திருப்பவும். மூச்சை வெளியிட்டபடி வலது கால் முட்டியை மடித்து வலது தொடைக்கும், வலது காலிற்கும் 90 டிகிரி கோண நிலையில் இருக்க வேண்டும்.
மாறுபட்ட திரிகோண நிலை
மூச்சை வெளியிட்படியே வலது கையை வலது காலின் அருகே தரையில் வைக்கவும். இடது கையை மேலே துாக்கி, வலது கை, வலது கால் மற்றும் இடது கை இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் இருத்தல் அவசியம். தலையை திருப்பி இடது கையை பார்க்கவும். 10 எண்ணும் வரை இந்நிலையில் இருக்க வேண்டும்.
பிறநிலை ஆசனங்கள் அடுத்த வாரம்...