/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்க 'பலே திட்டம்' ஐ.வி.எப்., செயற்கை கருவூட்டலில் புதிய மைல் கல்
/
புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்க 'பலே திட்டம்' ஐ.வி.எப்., செயற்கை கருவூட்டலில் புதிய மைல் கல்
புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்க 'பலே திட்டம்' ஐ.வி.எப்., செயற்கை கருவூட்டலில் புதிய மைல் கல்
புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்க 'பலே திட்டம்' ஐ.வி.எப்., செயற்கை கருவூட்டலில் புதிய மைல் கல்
ADDED : ஏப் 04, 2025 07:10 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஐ.வி.எப்., செயற்கை கருவூட்டல் திட்டத்தை பசுக்களுக்கு செயல்படுத்தி, கால்நடை துறை வெற்றி கண்டுள்ளது.
புதுச்சேரியில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு மற்றும் பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், இருக்கின்ற நிலத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, மாநிலத்தில் அதிகரித்து வரும் பால் தேவையை பூர்த்தி செய்திட, அரசின் கால்நடைத்துறை சார்பில் ஐ.வி.எப்., செயற்கை கருவூட்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் செயற்கை கருவூட்டல் பெற்ற மூன்று பசுக்கள் அடுத்தடுத்து மூன்று உயர் ரக கன்றுகளை ஈன்றுள்ளது, இது, கால்நடை விவசாயிகள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக நாட்டு பசு தினசரி 2 முதல் 3 லிட்டர் வரை பால் கறக்கும். அதுவே கலப்பின பசுவாக இருந்தால் 10 முதல் 12 லிட்டர் வரை பால் தரும். ஆனால் தற்போது ஐ.வி.எப்., செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கப்பட்டுள்ள பசுங்கன்று, கறவை பருவத்தின் போது, தினசரி 25 லிட்டர் பால் கறக்கும். இதனால், மாநிலத்தின் பால் உற்பத்தி மெல்ல அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுடன், கால்நடை துறை அதிகாரிகள் இத்திட்டத்தை விவசாயிகளிடம் விவரித்து வருகின்றனர்.
100 சதவீதம் மானியம்
மத்திய அரசின் 'ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்' திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் இந்த ஐ.வி.எப்., செயற்கை கருவூட்டல் ஒன்றுக்கு ரூ. 21 ஆயிரம் செலவாகிறது. இதில், மத்திய அரசின் பங்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ. 16 ஆயிரத்தை கால்நடை விவசாயிகள் செலுத்த வேண்டும். இருப்பினும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ. 16 ஆயிரத்தை புதுச்சேரி அரசே மானியமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
நாட்டிலேயே புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் தான், இந்த அதிநவீன கருத்தரிப்பு செய்யும் திட்டம் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான தொழில்நுட்பம் குறித்து கால்நடை துறை உதவி மருத்துவர் அனந்தராமன் கூறியதாவது:
பசுக்களில் ஏற்கனவே செயற்கை கருத்தரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பசுக்களில் செயற்கை கருத்தரிப்பு என்பது காளையின் உயிருள்ள விந்தணுக்களை சேகரித்து சரியான நேரத்தில், சரியான முறையில் பெண் இனப்பெருக்க உறுப்புடன் சேர்ப்பதாகும். இதன் மூலம் நாம் சாதாரண கன்றை போலவே இளம் தலைமுறையை பெற முடியும். இதில் காளை மாட்டின் விந்தணுக்களை சோதித்து கருப்பையில் மேம்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சரியான தருணத்தில் செலுத்தி இளம் தலைமுறை பெறப்படுகிறது.
தற்போது புதுச்சேரியில் அறிமுகப்படுத்தி இருப்பது ஐ.வி.எப்., செயற்கை கருவூட்டல் திட்டமாகும். சுருக்கமாக சொன்னால் உயர் ரக, கலப்பின, பாலினம் பிரிக்கப்பட்ட கருக்களை கொண்டு செயற்கை கருவூட்டல் முறையில் பெண் கன்றுகளை ஈனும் திட்டமாகும்.
இதன்படி, இன் விட்ரோ பெர்டிலைசேஷன்' (ஐ.வி.எப்.,) எனப்படும் இந்த அதிநவீன கருவூட்டல் திட்டத்தின் கீழ், ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் கரு முட்டைகளும், விந்தணுவும் சேர்க்கப்பட்டு கரு உருவாக்கப்படுகிறது.
இத்திட்டம் இரண்டு பகுதிகளை ஒன்று சேர கொண்டுள்ளது. ஒன்று புதுச்சேரியில் சினை பிடிப்பதற்கான ஆரோக்கியமானபசுவை தேர்வு செய்து, ஹார்மோன் ஊசி வலும்பு வரை தொடர்ந்து போடப்பட்டு வரும். அதே வேளையில் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் தினசரி 25 முதல் 30 லிட்டர் வரை அதிக பால் தரும் உயர் ரக பசுவின் கரு முட்டைகள் சேகரிக்கும் பணியும் ஒருசேர நடக்கும்.
இதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த உயர் ரக காளைகளின் விந்தணு சேர்க்கப்பட்டு, ஹைதராபாத் ஆய்வகத்தில் உள்ள கலப்பின பசுவிற்கு செயற்கை கருவூட்டல் செய்யப்படும்.
இதன் மூலம் உருவாகும் கருக்கள் 6 நாட்கள் வரை அந்த கலப்பின பசுவிடமே இருக்கும். ஏழாவது நாளில் இந்த உயர் ரக கருக்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து, விமானத்தில் சென்னைக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து புதுச்சேரிக்கு கொண்டு வந்து, இங்கு, ஹார்மோன் ஊசி போடப்பட்ட பசுவிற்கு வலிம்பு சோதித்து கர்ப்பப்பையில் நேரடியாக செலுத்தப்படும்.
இம்முறையில் கருவூட்டப்படும் கறவை மாடுகள், பெரும்பாலும் பெண் கன்றுகளையே ஈனும். ஏற்கனவே விந்தணுவில் எக்ஸ் குரோமோசோம், ஒய் குரோமோசோம்கள் பிரித்துவிடுவதே இதற்கு முக்கிய காரணம்.
வாடகை தாயாக செயல்படும் தாய் மாட்டின் குணங்களையும், மரபணு குணங்களையும் கொண்டிருக்காமல், கரு முட்டை எடுக்கப்பட்ட உயர் ரக மாடுகளைபோல அதிக அளவில் பால் கறக்கும்.
இவ்வகை கன்றுகள் வளர்ந்து 305 நாட்கள் கொண்ட கறவை காலத்தினை எட்டும்போது 8 ஆயிரம் லிட்டர் வரை பால் கறக்கும். இதனால், நாள் ஒன்றுக்கு சராசரியாக பெறப்படும் பாலின் அளவு 25 லிட்டர் வரை அதிகரிக்கும். ஒரு கிடாரி கன்று சாதாரணமாக தற்போது ரூ. 10 ஆயிரம் விலை போகும். ஆனால் இந்த ஐ.வி.எப்., கன்றுகள் ரூ. 50 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். எனவே, புதுச்சேரியில் பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் விவசாயிகளின் வருமானமும் பல மடங்காக உயரும் என்றார்.
தேசிய சராசரியை விட அதிகம்
இத்திட்டம் குறித்து கால்நடை துறை இணை இயக்குநர் மற்றும் திட்ட அதிகாரி குமரன் கூறியதாவது:
புதுச்சேரியில் முதன் முதலாக கடந்தாண்டு ஜூலை 1ம் தேதி தான் ஐ.வி.எப்., செயற்கை முறை கரு பரிமாற்றம் செய்யப்பட்டது. இதுவரை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆரோக்கியமான 350 கறவை பசுக்கள் தேர்வு செய்து, அதில் 125 கறவை பசுக்களுக்கு செயற்கை முறையில் கரு பரிமாற்றம் செய்யப்பட்டது. இதில் 31 பசுக்கள் சினை அறியப்பட்டுள்ளது. இதன் சினை வெற்றி விகிதம் 25 சதவீதமாகும். தேசிய அளவில் சினை வெற்றி விகிதம் 20 சதவிதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்கு பருவ வயதை எட்டிய கிடாரி அல்லது ஒன்று அல்லது இரண்டு கன்றுகளை ஈன்ற பசு தேர்வு செய்யப்படும். மாநிலத்தின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, கால்நடை விவசாயிகளிடம் இத்திட்டம் குறித்து நேரடியாக கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என்றார்.
கறவை பசு வளர்ப்பை லாபகரமான தொழிலாக மாற்ற புதுச்சேரி அரசு எடுத்துள்ள முயற்சிக்கு கால்நடை விவசாயிகள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. செயற்கை கருவூட்டல் திட்டத்தின் கீழ் புதிய கன்றுகளை உருவாக்க கால்நடை விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்திற்கு முதல் அடி புதுச்சேரியில் எடுத்து வைத்திருப்பது குறிப்பிடதக்கது.