ADDED : மார் 16, 2026 04:30 AM
புதுச்சேரி: மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும், தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கியின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
இந்த ஒலிபெருக்கியின் பயன்பாடு ஒலி மாசுபாட்டை விளைவிப்பதோடு, பொது அமைதியையும் சீர்குலைப்பதால், பொது மக்களுக்கு பெரும் சிரமத்தையும், தொந்தரவையும் ஏற்படுத்துகிறது. ஆதலால் தேர்தல் காலத்தில் ஒலிபெருக்கிகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. எனவே புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகே பகுதிகள் உட்பட இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையானது சட்டசபை தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும்.
