/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குப்பைகள் அகற்றாததை கண்டித்து ஏனாமில் பந்த்
/
குப்பைகள் அகற்றாததை கண்டித்து ஏனாமில் பந்த்
ADDED : மார் 22, 2025 03:27 AM
புதுச்சேரி: ஏனாமில் 15 நாட்களாக குப்பை அகற்றப்படாததை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் பந்த் நடந்தது.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் உள்ளது. ஏனாமில் தினமும் சேகரிக்கும் குப்பைகள் கனகலாப்பேட் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. கோதாவரி ஆற்றங்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் துாரத்தில் குப்பை கிடங்கு இருக்க கூடாது என மத்திய அமைச்சகம் தெரிவித்தது.
கனகலாபேட் பகுதியில் கொட்டும் குப்பைகளால், சுற்றுப்புற பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்த கிடங்கு மூடப்பட்டது.
குப்பை கொட்ட இடம் இல்லாததால், கடந்த 15 நாட்களாக ஏனாமில் குப்பைகள் அகற்றப்படவில்லை. சாலை முழுதும் குவியல் குவிலயாக குப்பைகள் குவிந்தது. குப்பை அகற்றாதை கண்டித்து ஏனாம் அ.தி.மு.க., சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு வணிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
பந்த் போராட்டம் காரணமாக நேற்று ஏனாமில் பஸ், ஆட்டோக்கள் இயங்கவில்லை. கடைகள், மதுபான கூடங்கள், பெட்ரோல் பங்குகள் இயங்கவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பந்த் போராட்டம் காரணமாக ஏனாமில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஏனாம் மண்டல நிர்வாகம் சார்பில் சாலையில் குவிந்து கிடந்த குப்பைகள் 10 டிராக்டர் மூலம் ஏற்றி, மின்துறை துணை மின் நிலையம் அருகில் உள்ள அரசு இடத்தில் கொட்டப்பட்டது.