ADDED : ஆக 03, 2025 03:44 AM
புதுச்சேரி: மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் சார்பில், வில்லியனுாரில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்திய அரசு நிதி சேவைகள் துறை சார்பில், ஊரக நிலைகளில் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் சார்பில், சிறப்பு முகாம், வில்லியனுார் லஷ்மண கிருஷ்ணா மஹாலில், நாளை 4ம் தேதி, காலை 10:30 மணியளவில் நடக்கிறது. முகாமில், பிரதமர் ஜனதன் யோஜனா, பீமா யோஜனா, அட்டல் பென்ஷன் யோஜனா போன்ற முக்கிய நிதி நல திட்டங்களில் பதிவு மற்றும் இதர சேவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கணக்குகளுக்கான வாரிசு நியமனம், உரிமை கோரா வைப்புத் தொகைகள், டிஜிட்டல் மோசடிகள் குறித்தும், புகார் மற்றும் தீர்வு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர் கேசவன் ராமச்சந்திரன், கலெக்டர் குலோத்துங்கன் உட்பட வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.