/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரீகன் ஜான்குமாருக்கு எதிராக பேனர்: பாகூரில் திடீர் பரபரப்பு
/
ரீகன் ஜான்குமாருக்கு எதிராக பேனர்: பாகூரில் திடீர் பரபரப்பு
ரீகன் ஜான்குமாருக்கு எதிராக பேனர்: பாகூரில் திடீர் பரபரப்பு
ரீகன் ஜான்குமாருக்கு எதிராக பேனர்: பாகூரில் திடீர் பரபரப்பு
ADDED : ஏப் 16, 2025 10:07 PM

பாகூர்: பாகூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் ஜான்குமார் எம்.எல்.ஏ.,வின், மகன் ரீகன் ஜான்குமாருக்கு எதிராக கண்டன பேனர் வைத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ், வரும் 2026ல் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிட முயன்று வருகிறார்.
அவருக்கு, ஆதரவாக பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் செயல்பட்டு வருகின்றனர்.
காமராஜர் நகர் மற்றும் நெல்லித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு தொகுதியில் மார்ட்டின் சார்லஸ் குழுமம் சார்பில் மக்களுக்கு மழை, வெள்ள நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக பாகூர் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு ஜான்குமார் எம்.எல்.ஏ.,வின் மகன் ரீகன் ஜான்குமார் தலைமையில், கடந்த சில மாதங்களாக நிவாரண பொருட்களும், ஏழை, எளிய மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஜான்குமார் அறக்கட்டளை, மார்ட்டின் பவுண்டேஷன் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற விரும்புவோருக்கு அடையாள அட்டை வழங்குதவற்கான வேலைகளும் நடந்து வருகிறது.
இதன் மூலம் வரும் 2026 தேர்தலில் பாகூர் தொகுதியில் போட்டியிட ரீகன் ஜான்குமார், ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரீகன் ஜான்குமாருக்கு எதிராக, பாகூர் சிவன் கோவில் எதிரே ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில், ''பூர்வீக மண்ணில் மண்ணின் மைந்தர்கள் உழைத்து சுயமரியாதையாக வாழும் பாகூரில், புதுவை காமாட்சியம்மன் கோவில் நிலத்தை அபகரித்தவன், புதுவை மக்களின் குடியை கெடுத்த லாட்டரி வியாபாரி ஜான்குமார் மகனே, ரீகன் ஜான்குமாரே பாகூரை விட்டு வெளியே போ' என, கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகூரில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு கட்சிகள், வங்கிகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அவர்களுக்கெல்லாம் வராத எதிர்ப்பு எங்களுக்கு மட்டும் ஏன் வருகிறது? பாகூர் தொகுதியில் மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகரித்து வருகிறது. இந்த எதிர்ப்பை நாங்கள் ஒன்றும் பெரியதாக எடுத்து கொள்ளப் போவதில்லை என ரீகன் ஜான்குமார் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.