/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதிமுறைகளை மீறி சாலையில் அணிவகுக்கும் பேனர்கள்
/
விதிமுறைகளை மீறி சாலையில் அணிவகுக்கும் பேனர்கள்
ADDED : ஜன 27, 2025 04:29 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பேனர் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு சாலைகளின் நடுவில் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேனர்களை சமீபகாலமாக வைக்கின்றனர்.
இதுபோன்று உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்கள் குறித்து, போலீசார் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வது கிடையாது. இதனால் புற்றீசல் போல, புதிது புதிதாக சாலையில் பேனர்கள் முளைத்துள்ளன. இந்த பேனர் கலாசாரத்தில் பலரின் உயிர்கள் பறிபோன கொடுமைகள் கூட அரங்கேறி இருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, கோர்ட் பல முறை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில் தற்போது மறைமலை அடிகள் சாலையில் இருந்து நெல்லித்தோப்பு வரை, திருமண நிகழ்ச்சிக்கு வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்கும் வகையில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, 100 அடிசாலையிலும் ஏராளமான பேனர்கள் அணிவகுத்து காணப்படுகின்றன. இதனால் சாலைகளில் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களால் வாகன ஓட்டிகளுக்கு கவனம் சிதற வழி வகை உள்ளது. அதுமட்டுமின்றி, பேனர்கள் சாலையில் தவறி விழுந்தால், விபரீதங்களை தடுக்க முடியாது. அதனால், விதிமுறைகளை மீறி சாலையில் வைக்கப்பட்டுள்ள, பேனர்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.