/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் ஒயின் ஷாப்புக்கு ஆதரவாக மீண்டும் பேரிகார்டு அகற்றம்; மக்கள் நலன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவர்னர் தலையிடுவாரா?
/
தனியார் ஒயின் ஷாப்புக்கு ஆதரவாக மீண்டும் பேரிகார்டு அகற்றம்; மக்கள் நலன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவர்னர் தலையிடுவாரா?
தனியார் ஒயின் ஷாப்புக்கு ஆதரவாக மீண்டும் பேரிகார்டு அகற்றம்; மக்கள் நலன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவர்னர் தலையிடுவாரா?
தனியார் ஒயின் ஷாப்புக்கு ஆதரவாக மீண்டும் பேரிகார்டு அகற்றம்; மக்கள் நலன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவர்னர் தலையிடுவாரா?
ADDED : ஆக 27, 2024 04:33 AM

புதுச்சேரி : கன்னியக்கோவிலில், கடலுார் சாலையில் தனியார் ஒயின் ஷாப்புக்கு ஆதரவாக மீண்டும் சென்டர் மீடியன் அகற்றப்பட்டதால் விபத்து அபாயம் எழுந்துள்ளது. சென்டர் மீடியனைநிரந்தரமாக மூட கவர்னர் உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி - கடலுார் தேசிய நெடுஞ்சாலையில், கன்னியக்கோவில் தனியார் ஒயின் ஷாப் எதிரே விபத்துகளை தடுப்பதற் காக, சாலையின் நடுவில் கான்கிரீட்டில் ஆன சென்டர் மீடியன் சுவர் எழுப்பப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த கான்கிரீட் சென்டர் மீடியன் திடீரென மர்மமான முறையில் வெட்டி எடுக்கப்பட்டு, ஒயின்ஷாப்பிற்கு செல்ல வழி விடப்பட்டது.
தனியார் ஒயின் ஷாப்புக்கு ஆதரவாக அரசியல் வாதிகள் அழுத்தம் கொடுக்க, வளைந்து கொடுத்த அதிகாரிகளும், இந்த கான்கிரீட் தடுப்பு சுவர் வெட்டி எடுக்க முழு ஆசி வழங்கினர். இதனால் விபத்துகள் நடப்பது மீண்டும் தொடர்கதையானது.
அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, வேறு வழியின்றி பேரிகார்டுகளை கொண்டு மீண்டும் மூடப்பட்டது. ஆனால், மூன்றாவது முறையாக இப்போது அந்த பேரிகார்டுகள் காணாமல்போய் விட்டது.
கிருமாம்பாக்கம் போலீசார், மதுக்கடைகளுக்கு சாதகமாக, பேரிகார்டுகளை அகற்றிய குற்றவாளிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 'பேரிகார்டுகளை அகற்றியவர்கள் யார் என்று தெரியவில்லை; விசாரித்து வருகிறோம்' என சப்பை கட்டு கட்டி வருகின்றனர். மேலும், பேரிகார்டு விவகாரத்தை மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
குற்ற புலனாய்வில் போலீசாருக்கு தெரியாத தொழில்நுட்பம் கிடையாது. பேரிகார்டுகள் அகற்றப்பட்ட இடத்தின் எதிரே 24 மணி நேரமும் செயல்படும் பெட்ரோல் பங்க் உள்ளது. சுற்றிலும் திருமண மண்டபம், மதுக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் 'சிசி டிவி' கேமராக்கள் உள்ளன. இவற்றை ஆராய்ந்தால் போதும். நிமிடத்தில் சாதாரணமாக குற்றவாளியை பிடித்து விடலாம்.
இல்லையென்றால் இருந்த இடத்தில் இருந்து, மொபைல்போன் டவர் லோகேஷனை ஆராய்ந்தால்கூட போதும். குற்றவாளியை பிடித்து விடலாம். ஆனால், பார்த்து வருகிறோம்... விசாரித்து வருகிறோம்... என சப்பை கட்டி வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர் என்று நன்றாக தெரிந்தும்கூட, அப்பகுதியில் உள்ள ஒயின் ஷாப்புக்கு ஆதரவாக மூன்றாவது முறையாக துணிச் சலாக துாக்கி எறிந்துள்ளனர். இதை சாதாரணமாக கருத முடியாது.
ஆனால், தனியார் ஒயின் ஷாப்புக்கு வருவாய் ஈட்டி கொடுக்க அக்கறையாக இருக்கும் கிருமாம்பாக்கம் போலீசார், பேரிகார்டுகளை அகற்றியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைப்பதிலேயே குறியாக உள்ளனர்.
சென்டர் மீடியனை அகற்றினால் நெடுஞ்சாலையான கடலுார் சாலையில் பெரும் விபத்து அபாயம் ஏற்படும்; உயிரிழப்புகள் ஏற்படும் என்று தெரிந்தும்கூடபொதுப்பணித்துறை அதிகாரிகள், துறை அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக உள்ளனர். இது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதன் மூலம், யாருக்கும் மக்களை பற்றியோ, அவர்களின் உயிரை பற்றியோ கவலையோ அக்கறையோ இல்லை என்பது தெரிய வருகிறது. இந்த விஷயத்தில் கவர்னர் கைலாஷ்நாதன் நேரடியாக தலையிட வேண்டும்.
தனியார் ஒயின் ஷாப்புக்கு ஆதரவாக சாலையின் நடுவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சென்டர் மீடியன் வழியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற பிரச்னையில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தால் கவர்னர் மீது மக்கள் மனதில் மதிப்பு பெருகும்; கவர்னர் களம் இறங்குவாரா?