/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூடுதல் பணி சுமையால் பி.சி.எஸ்., அதிகாரிகள்... திணறல்: கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
/
கூடுதல் பணி சுமையால் பி.சி.எஸ்., அதிகாரிகள்... திணறல்: கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கூடுதல் பணி சுமையால் பி.சி.எஸ்., அதிகாரிகள்... திணறல்: கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கூடுதல் பணி சுமையால் பி.சி.எஸ்., அதிகாரிகள்... திணறல்: கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ADDED : டிச 08, 2025 04:45 AM

புதுச்சேரி அரசில் 54 அரசு துறைகள் உள்ளன. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், புதுச்சேரி குடிமை பணி அதிகாரிகள் இத்துறைகளை கவனித்து வருகின்றனர்.
அரசின் ஆணிவேராக உள்ள அரசு துறைகள் அனைத்தும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பொறுப்பு அடிப்படையில் கவனித்து வருவதால் நிர்வாக பணிகள் தோய்வு அடைந்துள்ளது.
பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, திணறி வருகின்றனர்.
சில பி.சி.எஸ்., அதிகாரிகள் 7 முதல் 9 வகை அரசு துறை பணிகளை கவனித்து வருகின்றனர். தினமும் கோப்பும் கையுமாக ஒவ்வொரு துறையாக ஓடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களை எந்த துறையில் பார்க்க முடியும் என்பதே பொதுமக்களுக்கு பெரிய தேடலாக உள்ளது.
அரசு துறைகளின் உச்ச அதிகார மையமாக தலைமை செயலகம் உள்ளது. இங்கு சார்பு செயலர்கள் தான் அனைத்து அரசு துறைகளின் நிர்வாக கோப்புகளையும் கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் மட்டுமல்ல அரசு துறைகளிலும் இதே கதி தான்.
கூட்டுறவு பதிவாளர், பொருளாதார புள்ளியியல் துறை, எழுதுபொருள் அச்சு துறை, விஜிலென்ஸ் என, பல முக்கிய துறைகளில் முழு நேர இயக்குநர் இருந்தால் கூட சமாளிக்க முடியாது.அந்த அளவிற்கு 24 மணி நேரமும் பணிகள் இருக்கும். தற்போது பல துறைகள் இப்படி பொறுப்புகள் அடிப்படையில் காலியாக உள்ளது நிர்வாக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பணிகளையும் ஸ்தம்பிக்க வைக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க, அரசு துறை சார்பு செயலர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற்று வருவதும் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே விஜிலென்ஸ் செயலர் கண்ணன், உள்ளாட்சி துறை துணை செயலர் சவுந்திரராஜன், குடிமை பொருள் வழங்கல் துறை தனி செயலர் பாஸ்கரன் ஓய்வு பெற்றனர். இம்மாதத்துடன் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் உதயகுமார், தொழில் துறை இணை இயக்குநர் நரேந்திரன், வேளாண் துறை இணை செயலர் கார்த்திகேசன் ஓய்வு பெறுகின்றனர்.
அடுத்த மாதம் மாவட்ட தொழில் துறை பொதுமேலாளர் கோவிந்தராஜ், உழவர்கரை பி.டி.ஓ, ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற உள்ளது, அடுத்த அடுத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பி.சி.எஸ்.,காலியிடங்களை நிரப்ப வழியில்லாமல் இல்லை. கண்காணிப்பாளர்கள், தாசில்தார்கள் என, 11 பேர் பி.சி.எஸ்., அதிகாரிகள் பதவிக்கு தகுதியாகவே காத்திருக்கின்றனர்.
இவர்களின் கோப்பு சுற்றி சுற்றி வருகிறது.
இவர்களுக்கு பி.சி.எஸ்., அதிகாரிகளாக பதவி அளித்தால் துறை இயக்குநர் உள்ளிட்ட முக்கிய காலியிடங்களை நிரப்பிட முடியும். அதன் பிறகு சீனியர் அதிகாரிகளுக்கும் சார்பு செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை நியமித்து அனைத்து அரசு துறை காலியிடங்களை நிரப்பிட திறம்பட கையாள வழி இருக்கிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. மக்களுக்கு நல்லது செய்ய ஓரிரு மாதங்களே உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யாமல் கோட்டை விட்டதை செய்ய அரசுக்கு குறுகிய காலமே உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் முக்கிய பதவிகள்அனைத்தும் காலியாக இருந்தால் நினைத்ததை அரசால் குறுகிய காலத்திற்குள் எப்படி செய்ய முடியும் என, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களும் புலம்பி வருகின்றனர்.
எனவே, அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் உடனடியாக நிரப்ப கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.

