ADDED : ஆக 14, 2026 05:42 PM
புதுச்சேரி: பெத்தி செமினேர் சி.பி.எஸ்.இ., பள்ளியைச் சேர்ந்த எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளைச் சேர்ந்த 13 இளம் மாணவர்கள், சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரும், தமிழ்நாடு கவர்னர் மெய்க்காப்பாளர் பிரசன்ன குமார் சிறப்பு விருந்தினராகவும், புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமார் கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மழலை மாணவர்கள் தங்களது நினைவாற்றலையும் அதிவேகத் திறனையும் வெளிப்படுத்திப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். இதில் கெல்வின் அமியாஸ் 50 பறவைகளின் பெயர்களை 34 வினாடிகளிலும், ஷெர்வின் ஜோசப் உலகின் 50 தங்கச் சுரங்கங்களின் பெயர்களை 38 வினாடிகளிலும் கூறினர். பிரவீன் ஆங்கில எழுத்துகளை தலைகீழ் வரிசையில் வெறும் 6 வினாடிகளில் கூறினார். ஸ்ரீலட்சுமி பிள்ளை 10 புதிர் பாதைகளை 50 வினாடிகளில் தீர்த்தார்.
யோவான் ஜெரிஷ் 1 முதல் 10 வரையிலான பெருக்கல் வாய்ப்பாடுகளை 1 நிமிடம் 55 வினாடிகளிலும், சந்திரமவுலி 50 டைனோசர்களின் பெயர்களை 1 நிமிடம் 28 வினாடிகளிலும் அடையாளம் காட்டினர். எஸ்தர் அபிஷா 50 வீட்டு உபயோகப் பொருட்களை 1 நிமிடம் 24 மில்லி வினாடிகளிலும், சியானா அன்டோனெட்டா 50 விளையாட்டுகளின் பெயர்களை 27 வினாடிகளிலும் அடையாளம் கண்டு சாதனை படைத்தனர்.
கபிலமித்ரன் 50 வேதியியல் சேர்மங்கள் மற்றும் அவற்றின் வாய்ப்பாடுகளை 1 நிமிடம் 15 வினாடிகளிலும், கிஷன் ஆங்கில வினைச்சொற்களின் மூன்று அடிப்படை வடிவங்களை 2 நிமிடம் 35 வினாடிகளிலும், மித்ரன் 50 கணித சூத்திரங்களை 1 நிமிடம் 31 வினாடிகளிலும் விரைவாக கூறினர். துருவன் 100 எதிர்ச்சொற்களை 1 நிமிடம் 16 வினாடிகளிலும், கவீனா 50 எழுத்தாளர்களின் பெயர்களை 42 வினாடிகளிலும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்தனர்.
