பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் குமாரப்பாளையத்தில் ஓட்டு சேகரிப்பு
பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் குமாரப்பாளையத்தில் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 26, 2026 08:43 PM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் குமாரப்பாளையம் கிராமத்தில் நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணியில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று குமாரப்பாளையம் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, வீடு, வீடாக சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்து கூறி 'தாமரை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் பொதுமக்களிடம் கூறுகையில், 'மண்ணாடிப்பட்டு தொகுதி குமாரப்பாளையத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 2 கோடி அளவிற்கு சாலைகள், கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி உள்ளேன். விவசாயிகள் நலன்கருதி விவசாய நீர் பாசன வசதிக்காக புதிதாக 2 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் ஒரு கால பூஜைக்கான நிதி உதவி அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் கிடப்பில் உள்ள சாலை உள்ளிட்ட அனைத்து மக்கள் நலப்பணிகளை விரைந்து முடிக்க அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தாமரை சின்னத்தில் ஓட்டளித்து தன்னை மீண்டும் வெற்றி பெற செய்தால் கிராமத்தை மேலும் வளர்ச்சி அடைந்த கிராமமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்' என, உறுதியளித்து ஓட்டு சேகரித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன், அ.தி.மு.க., நிர்வாகிகள் சுத்துக்கேணி பாஸ்கர், மகாதேவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
