/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி
/
சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி
சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி
சபாநாயகருக்கு எதிராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி
ADDED : டிச 22, 2024 08:21 AM

சமரச முயற்சியா?
அமைச்சர், சபாநாயகர் மற்றும் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கவர்னரை அடுத்தடுத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவினார். அதன்பிறகு, கல்யாணசுந்தரம் தலைமையில் பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., தனி அணியாக திரண்டனர்.
பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவியும், ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி கேட்டு போர்க்கொடி துாக்கினர். இது தொடர்பாக கட்சி தலைமை வரை சென்று முறையிட்டும், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
இந்நிலையில் புதுச்சேரியில் களம் இறங்கிய லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், பா.ஜ., சுயேச்சை ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தனி அணியாக செயல்பட துவங்கினர். நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், அரசுக்கு எதிராக ஏ.எப்.டி. தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ., க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டணியில் இருந்து கொண்டு ஆளும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டது என்.ஆர்.காங்., பா.ஜ., இடையே பிளவை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சட்டசபை பா.ஜ., தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., ஆகியோர் கடந்த வாரம் டில்லி சென்று கட்சி பொறுப்பாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, 3 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகர் செல்வம் மீது, நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேரு மற்றும் அங்காளன் இருவரும் தனித்தனியாக சட்டசபை செயலரிடம் கடிதம் அளித்தனர்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர் ஆகியோர் நேற்று மதியம் திடீரென கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர்.
அப்போது, சபாநாயகர் செல்வமும் கவர்னர் மாளிகை வந்தார்.
'முதல்வருடன் நெருக்கத்தால் அதிருப்தி இருக்கலாம்'
சபாநாயகர் செல்வம் கூறுகையில், 'அலுவல் ரீதியாக கவர்னரை சந்திக்க வந்ததாகவும், தனக்கு எதிராக 2 எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் கொடுத்து இருப்பது பற்றி தெரியாது. முதல்வருடன் நெருக்கமாக இருப்பதால் என்மீது சிலர் அதிருப்தியில் இருக்கலாம்.
அரசு விழாக்களில் நான் பங்கேற்க விதி உள்ளது. தனக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிச்சயம் விவாதிக்கப்படும்' என்றார்.
'எங்கள் நிலைபாட்டை உரிய நேரத்தில் கூறுவோம் '
கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் கூறுகையில், 'கவர்னரை சந்திப்பது வழக்கமான நிகழ்வு' நாங்கள் தனி அணியாக செயல் படவில்லை.
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து எங்களது நிலைப்பாட்டை உரிய நேரத்தில் கூறுவோம்.
இந்த ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் என மாஜி முதல்வர் நாராயணசாமி கூறுவது தவறு. தைரியம் இருந்தால் எதிர்கட்சியாக உள்ள காங்., தி.மு.க., அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவார்களா? சபாநாயகர் குறித்து நிலைப்பாடு குறிப்பிட்ட நேரத்தில் தெரிய வரும்' என்றனர்.