/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சரை சந்திக்க வந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்; தடுத்து நிறுத்தம் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பரபரப்பு
/
மத்திய அமைச்சரை சந்திக்க வந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்; தடுத்து நிறுத்தம் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பரபரப்பு
மத்திய அமைச்சரை சந்திக்க வந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்; தடுத்து நிறுத்தம் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பரபரப்பு
மத்திய அமைச்சரை சந்திக்க வந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்; தடுத்து நிறுத்தம் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பரபரப்பு
ADDED : ஜன 06, 2025 06:51 AM

புதுச்சேரி : மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை கவர்னர் மாளிகையில் சந்திக்க வந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று புதுச்சேரி வந்தார். மதியம் 1:00 மணியளவில் கவர்னர் மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஓய்வெடுப்பதற்காக, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருடன் ஒரே காரில் சென்றார்.
அவரை வரவேற்பதற்காக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் வந்தனர். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஆகியோரும் மத்திய அமைச்சரை சந்திக்க வந்தனர். இவர்கள், ராஜ்நிவாசில் வரவேற்பறையில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை சந்திக்க காத்திருந்தனர்.
அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. 'அமைச்சர்கள் மட்டுமே மத்திய அமைச்சரை சந்திக்க அனுமதி உண்டு. எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க அனுமதி இல்லை' என்று கறாராக தெரிவித்தார்.
இதனால் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., டென்ஷன் அடைந்தார். 'மக்கள் பிரதிநிதிகள் மத்திய அமைச்சரை சந்திக்க கூடாது என்று தடுக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது யார். எங்கிருந்து இந்த உத்தரவு வந்தது' என, கேள்வி எழுப்பினார்.
போலீஸ் அதிகாரி, 'உயர் அதிகாரிகள் தான் சொன்னார்கள். அதை தான் செய்கிறேன்' என்றார்.
அதற்குள் இந்த விவரம் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு எட்டியதும், உடனடியாக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் உள்ளே அழைக்கப்பட்டனர்.
அங்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை சந்தித்த மூன்று எம்.எல்.ஏ,க்களும், சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். நினைவு பரிசும் வழங்கினர்.
பா.ஜ., எம்.எல்.ஏ.க்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 'அனைத்து பிரச்னைகளும் முடிந்துவிட்டதா' என்று வினவினார். அதற்கு 'இன்னும் பிரச்னை முடியவில்லை' என்று பதிலளித்து, அங்கிருந்து விடைபெற்றனர்.
வெளியே வந்த பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியே காரில் புறப்பட தயாராகினர்.
அப்போது, பா.ஜ., எம்.எல்.ஏ.க்களை தடுத்த அந்த போலீஸ் அதிகாரி அங்கு இருந்தார். அவரை கண்டதும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மீண்டும் டென்ஷன் அடைந்தார்.
மத்திய அமைச்சரை சந்திக்க கூடாது என்று எம்.எல்.ஏ.,க்களை தடுப்பதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்தார்.
அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,வை சமாதானம்படுத்தி, அனுப்பி வைத்தனர்.