பிராந்திய மொழிகளை பா.ஜ., விட்டுக் கொடுக்காது பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் நம்பிக்கை
பிராந்திய மொழிகளை பா.ஜ., விட்டுக் கொடுக்காது பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் நம்பிக்கை
ADDED : ஏப் 28, 2026 02:04 AM
புதுச்சேரி: மாநில பிராந்திய மொழிகளை எப்போதும் பா.ஜ., விட்டுக்கொடுக்காது என பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து காங்., மற்றும் தி.மு.க., கட்சிகள் திட்டமிட்டு பரப்பி வரும் தவறான மற்றும் ஆதாரமற்ற கருத்துக்களுக்கு புதுச்சேரி மாநில பா.ஜ., கண்டனம் தெரிவிக்கிறது.
புதுச்சேரியின் தனித்துவமான அடையாளம் மற்றும் கலாசார உரிமைகள் 1956ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு 'ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்' கீழ் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
இந்த ஒப்பந்தத்தின் பிரிவு 28-ன் கீழ் பிரெஞ்சு மொழி என்பது ஒரு கலாசார உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டக் கோட்பாடுகளின்படி, இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தின் வாக்குறுதிகளை காக்க கடமைப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு நிர்வாக சுற்றறிக்கையும் அல்லது கொள்கை மாற்றமும் இந்த சர்வதேச உடன்படிக்கையை மீற முடியாது.
நீட் தேர்வின் போது எதிர்க்கட்சிகள் செய்த பொய் பிரசாரங்களை முறியடித்து மாணவர்கள் சாதித்தது போல, தற்போது தேசிய கல்விக் கொள்கை யின் கீழும் அவர்கள் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர். சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளிகள் 99.79 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருப்பது, எதிர்க்கட்சிகளின் கற்பனையான பயமுறுத்தல்கள் தோல்வியடைந்ததை காட்டுகிறது.
புதுச்சேரியின் தனித்தன்மையை காக்க பா.ஜ., எப்போதும் குரல் கொடுக்கும். பிரெஞ்சு கலாசார அடையாளத்தையும், தமிழ், தெலுங்கு மலையாளம் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பிராந்திய மற்றும் அலுவல் மொழிகளின் உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
