பா.ஜ., முயற்சி வெற்றி பெறாது; எதிர்க்கட்சி தலைவர் சிவா கருத்து
பா.ஜ., முயற்சி வெற்றி பெறாது; எதிர்க்கட்சி தலைவர் சிவா கருத்து
ADDED : ஏப் 18, 2026 08:40 PM
புதுச்சேரி: மாநில உரிமைகளைப் பறிக்கின்ற எந்த சட்டங்களை இயற்ற பா.ஜ., முயற்சி செய்தாலும் அது ஒருபோதும் வெற்றி பெறாது என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்தார்.
இது குறித்து அவரது அறிக்கை:
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், மாநிலங்களின் மக்கள் தொகையை கணக்கில் வைத்து இடங்களை அதிகரித்து, அதன் பிறகு இடஒதுக்கீடு வழங்குவோம் என்பது ஆதிக்கவாதிகளின் மோசடித் திட்டம்.
இது பெண்களின் உரிமையை வழங்காமல் காலங்கடத்தும் தந்திரம் மட்டுமல்லாது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் அரசியல் பலத்தைக் குறைக்கும் சதி. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை தனியாக தாக்கல் செய்யாமல், தொகுதி மறு சீரமைப்பு வரையறையுடன் இணைத்திருப்பது திட்டமிட்ட சதிச்செயல். 33 சதவீத இடஒதுக்கீடு தடையாவதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று பொய்ப் பிரசாரம் செய்யும் பா.ஜ.,வினருக்கு, இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.
மாநில உரிமைகளைப் பறித்து, குரலற்றவர்களின் மன்றமாக பார்லிமெண்ட்டை மாற்றத் துடிக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
