/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூன் 01, 2025 04:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மருக்கு 7வது முறையாகவும், காரைக்கால் ஜிப்மருக்கு மூன்றாம் முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மருக்கு புதுச்சேரி மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதன் கிளை மருத்துவமனை காரைக்காலில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு ஏற்கனவே ஆறு முறையும், காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரிக்கு 2 முறையும் மர்ம நபர்கள் இ- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்த நிலையில் நேற்று மீண்டும் இரு மருத்துவமனைக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதுபற்றி தகவலறிந்த கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் டோனியுடன் சென்று மருத்துவமனையில் மக்கள் அதிகம் கூடும் அவசர சிகிச்சை மையம், குழைந்தைகள் பிரிவு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி வார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முழுமையாக சோதனையிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். நுழைவு வாயிலில் கமாண்டோ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு முழு சோதனைக்கு பிறகே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோன்று, காரைக்கால் ஜிப்மர் மருத்துவனையில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுசன்யா தலைமையிலான போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர். இரு மருத்துவமனைகளிலும் 2 மணி நேரம் நடந்த சோதனையில், இ-மெயிலில் வந்த தகவல் புரளி என்பதை உறுதி செய்தனர்.
இருப்பினும், இரு மருத்துவமனைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.