/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பனாறு வாய்க்காலில் பாலம் கட்டும் பணி துவக்கம்
/
உப்பனாறு வாய்க்காலில் பாலம் கட்டும் பணி துவக்கம்
ADDED : ஏப் 02, 2025 03:53 AM

புதுச்சேரி : உப்பனாறு வாய்க்கால் மீது மேம்பாலம் அமைக்கும் பணி மூன்றாவது முறையாக துவங்கப்பட்டு, தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னையை சமாளிக்க மறைமலையடிகள் சாலை காமராஜர் சாலையை இணைக்கும் வகையில் உப்பனாறு வாய்க்கால் மீது மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
732 மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால் மீது இரு பக்கமும் நடைபாதையுடன் கூடிய பாலம் அமைக்க 2008ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டது. முதலில் மேம்பாலம் கட்டும் பணியை எடுத்த நிறுவனம் ரூ. 3.5 கோடிக்கு பைல் பவுண்டேஷன் அமைத்ததுடன் பணியை நிறுத்தியது.
இரண்டாவது முறையாக மீண்டும் பாலம் கட்ட கடந்த 2014ம் ஆண்டு ஹட்கோ வங்கியில் ரூ. 37 கோடி கடனும், மாநில அரசு ரூ. 7.15 கோடி சேர்த்து மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
அப்போது, பாலம் வேலை நடப்பதால் உப்பனாறு வாய்க்கால் வழியாக உருளையன்பேட்டை தொகுதிக்குள் மழைநீர் புகுவதாக கூறி பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக பொதுப்பணித்துறை மூலம் ரூ.29.25 கோடி மதிப்பீட்டில், தனியார் நிறுவனம் மூலம் காமராஜர் சாலை முதல் மறைமலையடிகள் சாலை வரை உப்பனாறு பாலத்தின் மீதமுள்ள வேலைகளை முடிப்பதற்கும், பாலாஜி தியேட்டர் அருகேயுள்ள பழைய பாலத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான பணிகளை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கடந்த மார்ச் 13ம் தேதி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
அதன்படி, காமராஜர் சாலையில் இருந்து 50 மீட்டரும், மறைமலையடிகள் சாலையில் இருந்து 50 மீட்டரும் என உப்பனாறு பாலத்துடன் சாலைகளை இணைக்கும் பணியும், பாலத்தின் இருபுறமும் 732 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் தற்போது துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக, வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் செல்லாமல் தடுக்க, மெகா சைஸ் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆகையால், இப்பணியினை விரைந்து முடிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

