ADDED : ஜூன் 08, 2026 04:08 AM
புதுச்சேரி: பி.எஸ்சி., நர்சிங் பொதுநுழைவு தேர்வு தள்ளி போகிறது.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் இடங்களுக்கு கடந்த 18ம் தேதி முதல் 3ம் தேதி வரை சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மாணவ, மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
விண்ணப்பம் போட பதிவு செய்திருந்த 2,413 பேரில் 2,312 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்து இருந்தனர். புதுச்சேரியில் 1,660 பேர், காரைக்கால்-472, மாகி-98, ஏனாம் 82 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான நுழைவு தேர்வு வரும் 14ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நுழைவு தேர்வினை ஜூலை முதல் வாரத்தில் தள்ளி வைக்க சுகாதார துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகிறது.
நர்சிங் நுழைவு தேர்வு கேள்விகள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பாடத்திட்டத்தின் தரத்தில், மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தலா 20 மதிப்பெண்கள் வீதம் 5 பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். நர்சிங் ஆப்டிடியூட்20 மதிப்பெண்கள், இயற்பியல் 20, வேதியியல்20, உயிரியல் 20, ஆங்கிலம் 20 மதிப்பெண்களுக்கு என்ற அடிப்படையில் கேள்ளிகள் கேட்கப்படும்.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்:
நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற தகுதி பெர்சண்டைல் அவசியம். பொதுப்பிரிவினர்-50, பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள்-45, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர்-40, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள்-40 பெர்சண்டைல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
