பட்ஜெட்: உள்ளாட்சி தேர்தலை நடத்த மாகே எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
பட்ஜெட்: உள்ளாட்சி தேர்தலை நடத்த மாகே எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஆக 25, 2026 08:01 PM
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மாகே எம்.எல்.ஏ., அசோக் குமார் பேசியதாவது:
புதுச்சேரியில் சுதந்திரத்திற்குப் பிறகு 1956, 1962, 1968 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் எந்தத் தடையுமின்றி நடந்து வந்தன. 38 வருட இடைவெளிக்குப் பிறகு, 2006-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
அந்தக் குழுவின் பதவிக்காலம் 2011-ல் முடிவடைந்தது. அதன் பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை. 2021-ல் இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதிலும், தொகுதி எல்லை நிர்ணயம் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு காரணமாக அது நடைபெறவில்லை.
தற்போது அனைத்துத் தடைகளும் நீங்கிவிட்டது. இருப்பினும், மாநிலத் தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. அப்பதவியை உடனடியாக நிரப்புவதாக புதுச்சேரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. எனவே, மாநிலத் தேர்தல் ஆணையரை நியமித்து, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
