ADDED : ஆக 24, 2026 04:51 PM
கவர்னர் உரையில் 9 லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. குடிநீர் திட்டம் குறித்து கவர்னரின் முக்கிய அறிவிப்பு:
பிரெஞ்சு வளர்ச்சி முகமை நிதியுதவியுடன், புதுச்சேரி நகர்ப்புறங்களில் குடிநீர் வழங்கும் அமைப்பை நவீனமயமாக்கி மேம்படுத்தும் வகையில் ரூ.534 கோடி மதிப்பிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வில்லியனுார் , ஜெயராம் நகர், அமைதி நகர், கணுவாப்பேட்டை,உத்திரவாகினிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 179.68 கோடி செலவில் குடிநீர் வழங்கல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் சுமார் 68 ஆயிரம் நபர்கள் பயனடைவார்கள். மேலும், ரூ.15.40 கோடி செலவில் நான்கு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கூடுதலாக 70 ஆயிரம் நபர்கள் பயனடைவார்கள். அதோடு, புதிய நிலத்தடி நீர் ஆதாரங்களை உருவாக்குதல், குடிநீர் விநியோக அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் ரூ.42 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் நிறைவடைந்த பிறகு புதுச்சேரி ஆட்சிப்பரப்பு முழுவதும் 9 லட்சம் மக்களுக்கு தொடர்ந்து சுத்தமான குடிநீர் வழங்க முடியும்.
