/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் மோசடி கும்பலிடம் தொழிலதிபர் ரூ.1.69 கோடி இழப்பு
/
ஆன்லைன் மோசடி கும்பலிடம் தொழிலதிபர் ரூ.1.69 கோடி இழப்பு
ஆன்லைன் மோசடி கும்பலிடம் தொழிலதிபர் ரூ.1.69 கோடி இழப்பு
ஆன்லைன் மோசடி கும்பலிடம் தொழிலதிபர் ரூ.1.69 கோடி இழப்பு
ADDED : டிச 14, 2024 03:27 AM
புதுச்சேரி: புதுச்சேரி, தில்லைமேஸ்திரி வீதியை சேர்ந்தவர் சரவணன், தொழிலதிபர். இவரை கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட சுந்தர்ராஜன் என்பவர், தான் புதுச்சேரியை சேர்ந்தவர் என்றும், தற்போது சென்னையில் வசித்து வருவதாக கூறி பேசி பழகி வந்துள்ளார்.
அப்போது, இருவரும் ஆன்லைன் வர்த்தக மூதலீடு தொடர்பாக பேசியபோது, சரவணன் ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக அளவில் பணத்தை இழந்ததாக கூறியுள்ளார்.
இதற்கு, சுந்தர்ராஜன், ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணத்தை மீட்டு தருவதற்கு, தன்னிடம் ஆள் இருப்பதாக சென்னையை சேர்ந்த கோகுல் என்பரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதையடுத்து, கோகுல், சரவணனிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணத்தை நவம்பர் மாதத்திற்குள் லாபத்துடன் சேர்த்து ரூ.4 கோடியே 60 லட்சத்தை மீட்டு தருவதாகவும், அதற்காக பணம் செலுத்துமாறு கூறினார். இதைநம்பிய சரவணன், கடந்த ஜூன் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை பல்வேறு தவணைகளாக கோகுல் தெரிவித்த வங்கி கணக்கிற்கு 1 கோடியே 69 லட்சத்து 39 ஆயிரத்து 770 ரூபாய் அனுப்பியுள்ளார்.
ஆனால், கோகுல் கூறியபடி நவம்பர் மாதத்திற்குள் ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணத்தை சரவணனுக்கு மீட்டு தரவில்லை. அதன்பின், சரவணன் கோகுலை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அதன்பிறகே, ஆன்லைன் மோசடி கும்பலிடம் மீண்டும் பணத்தை இழந்தது சரவணனுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்த இழந்த பணத்தை மீட்டு தருவதாக கூறி, தொழிலதிபரிடம் ரூ.1.69 கோடியை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.