அமைச்சரவை விரிவாக்கம் மீண்டும் தள்ளிப்போகிறது: என்.ஆர்.காங்., - பா.ஜ., மல்லுக்கட்டு
அமைச்சரவை விரிவாக்கம் மீண்டும் தள்ளிப்போகிறது: என்.ஆர்.காங்., - பா.ஜ., மல்லுக்கட்டு
ADDED : ஜூன் 09, 2026 12:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்., கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தினால், அமைச்சரவை விரிவாக்கம் மீண்டும் தள்ளிப்போகிறது. வரும் 17 ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடத்தவும், அன்றே அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த 16வது சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும், அமைச்சரவை பதவிகளை பங்கிட்டு கொள்வதில் பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்., கட்சிகளிடையே இழுபறி நீடித்தது. கடந்த முறை போன்றே இம்முறையும் 2 அமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவி வழங்க பா.ஜ., வலியுறுத்தியது. அதனை ரங்கசாமி ஏற்க மறுத்தார்.
நீண்ட இழுபறிக்கு பின், கடந்த 13ம் தேதி ரங்கசாமி முதல்வராகவும், பா.ஜ., நமச்சிவாயம், என்.ஆர்.காங்., மல்லாடி கிருஷ்ணராவ் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், எவருக்கும் இலாகா ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 3ம் தேதி முதல்வர் ரங்கசாமி, கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான கடிதத்தை வழங்கினார்.
அந்த கடிதத்தை, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பு விழா கடந்த 7 ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு முறை பயணமாக திரிபுரா மற்றும் குஜராத் மாநிலங்களில் சுற்றுப் பயணத்தில் இருந்ததால், அமைச்சர்கள் பதவியேற்பு கோப்பு ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லை.
ஒப்பதல் கிடைக்கவில்லை அவர், நேற்று டில்லி திரும்பிய பின், அமைச்சர்கள் பதவியேற்பு கோப்பு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் வரும் 11ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும் என, அரசு வட்டாரத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு நேற்றும் ஜனாதிபதியிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை.
பா.ஜ., அதிருப்தி இதுகுறித்து விசாரித்தபோது, புதுச்சேரியுடன் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. அதில், 4 மாநிலங்களில் கடந்த மாதமே முழு அமைச்சரவை பதவியேற்று நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில், தவணை முறையில் அமைச்சர்கள் பதவியேற்பு நடத்துவதும், மேலும், பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யாதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், நிலுவையில் உள்ள ஒரு அமைச்சர் பதவி , இலாகா ஒதுக்கீடு மற்றும் சபாநாயகர் பதவி விவகாரத்தை இறுதி செய்து, பதவியேற்பு நடத்த பா.ஜ., அழுத்தம் கொடுத்து வருகிறது.
நிதி ஆயோக் கூட்டம் இந்நிலையில் வரும் 11ம் தேதி டில்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் முதல்வர் இம்முறையேனும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமைச்சரவையில் இடம் பெறவுள்ள எம்.எல்.ஏ.,வின் குடும்ப நிகழ்ச்சி வரும் 11ம் தேதி நடக்கிறது. இதனால், வரும் 11ம் தேதி நடைபெறும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போகிறது.
அடுத்த வாரம் பதவியேற்பு வரும் 17 ம் தேதி வளர்பிறை முகூர்த்த நாளில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடத்தவும், அன்றே அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் தேர்தல் மற்றும் நியமன எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
