ADDED : ஜன 01, 2025 05:24 AM
புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி அரசு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். மேலும் எல்.இ.டி. மற்றும் லேசர் விளக்குகள் அமைக்கப்பட்டு கடற்கரை வண்ணமயமாக காணப்படும்.
ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 1ம் தேதி வரை துக்க நாளாக கடைப்பிடிக்க அறிவுறுத்தியது.
அதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு விழாக்களும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் புத்தாண்டை முன்னிட்டு கடற்கரை சாலையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், மின் விளக்கு அலங்காரம் ஆகியவை ஏதுமின்றி வழக்கம்போல் கடற்கரை சாலை காட்சி அளித்தது. புத்தாண்டை முன்னிட்டு கடற்கரையில் ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வந்த சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் ஆகியோர் ஏமாற்றமடைந்தனர்.
இதனால் வழக்கத்திற்கு மாறாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை இழந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

