மனு தாக்கலுக்கு சான்றிதழ் பெற திண்டாடும் வேட்பாளர்கள்
மனு தாக்கலுக்கு சான்றிதழ் பெற திண்டாடும் வேட்பாளர்கள்
ADDED : மார் 20, 2026 07:35 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மனு தாக்கல் செய்வதற்கு, சான்றிதழ் பெற வேட்பாளர்கள் திண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. தொடர்ந்து, புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான மனுத் தாக்கல் கடந்த 16-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் மனுவுடன் பல்வேறு முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக வருவாய் துறையில் ஜாதி சான்றிதழ், வரி நிலுவையில்லா சான்று, உள்ளாட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, மின்துறையில் கட்டண பாக்கி இல்லை என்பதற்கான தடையில்லா சான்று மற்றும் போலீசில் வழக்கு ஏதும் இல்லா சான்றிதழ் என பல சான்றிதழ்கள் இணைக்க வேண்டும் என, அறிவித்து இருந்தது.
இந்த சான்றிதழ்களை பெற அரசு அலுவலகங்களில் ஒரு வாரத்திற்கு மேலாகும். ஆனால், தற்போது மனுத் தாக்கல் செய்ய 23ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் நாளை ரம்ஜான் விடுமுறை, நாளை மறுநாள் ஞாயிறு விடுமுறை. இன்று விட்டால் 23ம் தேதி என இரு நாட்கள் மட்டுமே உள்ளது.
நாளையும், நாளை மறுநாளும் வார விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்கள் இயங்காது. இதனால் சான்றிதழ் பெற முடியாமல் பல வேட்பாளர்கள், குறிப்பாக சுயேச்சை வேட்பாளர்கள் பெரும் தவிப்பில் உள்ளனர்.
அதனால், நாளையும், நாளை மறுநாளும் வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கவும், மனுக்கள் பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
