அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
ADDED : ஏப் 23, 2026 11:37 PM
புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையின் திட்டப் பிரிவு செயற்பொறியாளர் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருபவர் சோமு, 39. இவரை கடந்த 22ம் தேதி புதுசாரம், கவிகுயில் நகரை சேர்ந்த வடிவேலு, என்பவர் பிளம்பிங் உரிமம் பெறுவது தொடர்பாக அணுகியுள்ளார். அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தற்போது உரிமம் ஏதுவும் வழங்க முடியாது என சோமு தெரிவித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த வடிவேல், அங்கிருந்த அதிகாரிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், திடீரென மேஜை மீது இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சோமுவைத் தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை உடைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சோமு அளித்த புகாரின் பெரியக்கடை போலீசார் வடிவேலு மீது அரசு ஊழியரைபணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
