/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணை துவக்கம் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு
/
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணை துவக்கம் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணை துவக்கம் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணை துவக்கம் எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு
ADDED : ஆக 07, 2025 02:21 AM

புதுச்சேரி: பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் புதுச்சேரியில் முகாமிட்டு விசாரணையை துவங்கியுள்ளனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை, பாரதி நகரை சேர்ந்தவர் உமாசங்கர் 40; பா.ஜ., பிரமுகரான இவர், கடந்த ஏப்., 26ம் தேதி நள்ளிரவு, கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில், மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சாமி பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த ரவுடி கர்ணன், 40; உட்பட 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், டில்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் இதையே வலியுறுத்தின.
இந்நிலையில், உமாசங்கரின் தந்தை காசிலிங்கம், ஆளும் கட்சி பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதால், இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், உமாசங்கர் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன்பேரில், இவ்வழக்கின் கோப்புகளை புதுச்சேரி போலீசார் கடந்த 30ம் தேதி சி.பி.ஐ., வசம் ஒப்படைத்தனர். வழக்கு கோப்புகளை ஆய்வு செய்த சி.பி.ஐ., போலீசார், கடந்த 31ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து எஸ்.பி., தலைமையிலான 6 பேர் கொண்ட சி.பி.ஐ., குழுவினர் நேற்று புதுச்சேரிக்கு வந்து, விசாரணையை துவங்கினர். அதில், உமாசங்கர் கொலை செய்யப்பட்ட கருவடிக்குப்பம் சாலை, குயில்தோப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.
பின், போலீஸ் தலைமையகத்திற்கு சென்று, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்தை சந்தித்து கொலை சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர் விசாரணைக்காக இக்குழுவினர் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.
இதுகுறித்து சி.பி.ஐ., வட்டாரத்தில் விசாரித்தபோது, இக்கொலை வழக்கில் கைதாகியுள்ள ரவுடி கர்ணன் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்கவும், அதேபோன்று, உமாசங்கரின் தந்தை காசிலிங்கம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்த சமீபத்தில் அமைச்சர் பதவியை இழந்த எம்.எல்.ஏ., மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகள் புதுச்சேரியில் முகாமிட்டு இருப்பது, அரசியல் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.