புதுச்சேரி வணிக வரித்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் சோதனை
புதுச்சேரி வணிக வரித்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் சோதனை
ADDED : பிப் 20, 2024 05:41 AM
புதுச்சேரி : வரி ஏய்ப்புக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் கூடுதல் ஆவணங்களை தேடி சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று வணிகவரித்துறையில் மீண்டும் சோதனை நடத்தினர்.
வில்லியனுாரை சேர்ந்தவர் சோலை செல்வராஜ், அரியூரில் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில் வணிக வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டுக்கான வரி மற்றும் அபராதம், பிற கட்டணங்களுடன் சேர்த்து ரூ. 12.35 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது.
இதை தள்ளுபடி செய்ய வரி ஆலோசகர் ராதிகாவிடம், சோலை செல்வராஜ் முறையிட்டார். அதற்கு அவர், ரூ. 4 லட்சம் தந்தால், அபராதமின்றி வரி செலுத்த ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.
அதில், பேரம் பேசப்பட்டடு இறுதியில் ரூ. 2.8 லட்சம் லஞ்சம் தர முடிவு செய்த சோலை செல்வராஜ், ராதிகா வங்கி கணக்கில் தவணை முறையில் ரூ.2 லட்சம் அனுப்பினார். இதனை அறிந்து சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த 6ம் தேதி புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
பின்னர், லஞ்சம் வாங்கிய உதவி வணிக வரி அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம், வரி ஆலோசகர் ராதிகா, சோலை செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை மீண்டும் புதுச்சேரி வந்த 5 பேர் கொண்ட சி.பி.ஐ., குழுவினர், வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் சேகரிக்கும் பொருட்டு வணிகவரித்துறை அலுவலத்தில் மீண்டும் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று இரவிலும் நீடித்தது.
