புதுச்சேரி போலி மருந்து விவகாரம் சி.பி.ஐ., தனித்தனியே 2 வழக்கு பதிவு
புதுச்சேரி போலி மருந்து விவகாரம் சி.பி.ஐ., தனித்தனியே 2 வழக்கு பதிவு
ADDED : மார் 06, 2026 03:58 AM
புதுச்சேரி: நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய போலி மருந்து விவகாரத்தை, மத்திய உள்துறை அமைச்சக அனுமதியை தொடர்ந்து சி.பி.ஐ., 2 வழக்குகள் பதிந்து விசாரணையை துவங்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் மத்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய சோதனையில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன்,42; பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து நாடு முழுதும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இயங்கி வந்த தொழிற்சாலைகள், குடோன்களை சோதனை நடத்தி ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
ராஜா வீட்டில் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், தங்க, வைர நகைகள் கைப்பற்றினர். தொடர்ந்து ராஜா, ராணா, மெய்யப்பன், விவேக் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து எஸ்.பி., நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், சிறையில் அடைக்கப்பட்ட ராஜாவை காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில் ராஜாவின் மனைவி ஞானப்பிரியா, பங்குதாரரான என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் போலி மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி., தொகையை குறைக்க உதவிய ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கவர்னர் கைலாஷ்நாதன், இவ்வழக்கை சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இருப்பினும், கடந்த 2 மாதங்களாக சி.பி.ஐ., விசாரணையை துவங்காததால், வழக்கை மூடி மறைக்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம், புதுச்சேரி போலி மருந்து வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து டில்லி சன்பார்மா நிறுவனம் மற்றும் சென்னை குரோம்பேட்டை லுாபின் நிறுவனம் அளித்த புகார்களின் பேரில் சி.பி.ஐ., அதிகாரி அனில்குமார் தலைமையிலான குழுவினர், தனித்தனியே இரு வழக்குகள் பதிந்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
இக்குழுவினர் விரைவில் புதுச்சேரிக்கு வந்து, சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் உள்ள வழக்கு ஆவணங்களை முறைப்படி பெற்றுக் கொண்டு தங்கள் விசாரணையை துவங்க உள்ளனர்.
இதனால், கடந்த 2 மாதங்களாக கிணற்றில் போட்ட கல்லாக கிடந்த போலி மருந்து விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், பலர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
