மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி துவக்கம் மே 17ல் சுயகணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி துவக்கம் மே 17ல் சுயகணக்கெடுப்பு
ADDED : ஏப் 29, 2026 04:34 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஜூன் 1ம் தேதி முதல் துவங்க உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த 25ம் தேதி வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில், வரவிருக்கும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை சிறப்பாக செய்திட, பொது மக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் ஆதாரம் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தரவுகள் தேசிய திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு மற்றும் நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகுதி வரையறை மற்றும் ஒதுக்கீட்டில் முக்கிய பங்காற்றுகின்றன.
இருவகை கணக்கெடுப்பு: பொதுமக்கள் தாங்களே se.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தகவல்களை பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு வருகிற மே 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிப்பர்.
இந்த கணக்கெடுப்பின்போது வீட்டின் அமைப்பு, குடிநீர் வசதி, கழிவறை சமையல் எரிபொருள், மின் இணைப்பு, இணைய வசதி உள்ளிட்ட 33 விவரங்கள் சேகரிக்கப்படும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் படி பொதுமக்கள், கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாய மாகும்.
வீடுகளில் கணக்கெடுப் பு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
தேவையானபோது, கணக்கெடுப்பு படிவங்களை சரியாக நிரப்பி ஒப்படைக்க வேண்டும்.
கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியம் பாதுகாக்கப்படும்.
இந்த தகவல்கள் எந்த வழக்குகளிலும் சான்றாக பயன்படுத்தப்படாது.
எனவே, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று, துல்லியமான தகவல்களை வழங்கி கணக்கெடுப்பு பணி வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டும்.
