மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்: முன்னாள் எம்.பி.,ராமதாஸ் கோரிக்கை
மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்: முன்னாள் எம்.பி.,ராமதாஸ் கோரிக்கை
ADDED : பிப் 27, 2024 06:43 AM
புதுச்சேரி : மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முன்னாள் எம்.பி.,ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய நலவழித் துறை அமைச்சகம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பயன்படும் வகையில் மத்திய அரசு நல்வாழ்வு திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் பலன்கள் யூனியன் பிரதேச அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை டில்லி மற்றும் சண்டிகார் யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து யூனியன் பிரதேச அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் நீட்டித்து மத்திய அரசு ஆணை சென்ற ஆண்டு நவம்பர் 13ம் தேதி பிறப்பித்துள்ளது.
ஆனால் இந்த ஆணையை மூன்று மாதங்கள் ஆகியும் புதுச்சேரி அரசு செயல்படுத்தாமல் உள்ளது.மத்திய அரசு கொடுக்க நினைக்கும் பலனை புதுசசேரி ஓய்வூதியதாரர்களுக்கு தடுத்து நிறுத்துகிறது. இது ஒரு நியாயமற்ற செயல். பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசு கூறும் விதிகளின்படி மத்திய அரசின் நல்வாழ்வு திட்டத்தில் சேர விரும்புகிறார்கள்.
புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு விதிகளுக்கு உட்பட்டு இந்த திட்டத்தை செயல்படுத்த லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு, ஆணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
