/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தங்க இடம் கொடுத்தவர் வீட்டில் செயின் பணம், பைக் திருடியவர்களுக்கு வலை
/
தங்க இடம் கொடுத்தவர் வீட்டில் செயின் பணம், பைக் திருடியவர்களுக்கு வலை
தங்க இடம் கொடுத்தவர் வீட்டில் செயின் பணம், பைக் திருடியவர்களுக்கு வலை
தங்க இடம் கொடுத்தவர் வீட்டில் செயின் பணம், பைக் திருடியவர்களுக்கு வலை
ADDED : மார் 05, 2024 05:04 AM
புதுச்சேரி: தங்குவதற்கு இடமின்றி நடுரோட்டில் நின்றிருந்த இருவரை வீட்டில் தங்க வைத்த நபரின் 3 சவரன் நகை, பைக், பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஊட்டி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதி, 44; முதலியார்பேட்டை, ஜான்பால் நகர், நுாறடிச் சாலையில் வாடகை வீட்டில் தங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் ஊட்டியில் தங்கியுள்ளனர்.
கடந்த 25ம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு புதுச்சேரி நகர பகுதியில் நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினார். நுாறடிச்சாலை ஆர்.டி.ஒ. அலுவலகம் மேம்பாலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பியபோது சாலையில் காருடன் நின்றிருந்த 2 பேர், தாங்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.
மதுரை செல்ல வேண்டும், முடியாததால் இரவு தங்குவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர்.
ஜோதி தன்னுடைய வீட்டில் தங்கி கொண்டு காலையில் செல்லுங்கள் என அழைத்து சென்றார். வீட்டின் மொட்டை மாடியில் படுத்தால் கொசு கடிக்கும் என கூறி தனது வீட்டின் ஹாலில் இருவரையும் படுக்க சொல்லிவிட்டு, ஜோதி தனது அறைக்கு சென்று படுத்தார்.
முன்னதாக தனது 3 சவரன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் பணம், ஸ்மார்ட் வாட்ச், மொபைல்போனை மேசையில் வைத்துவிட்டு சென்றார்.
காலையில் எழுந்து பார்த்தபோது, இருவரும் மாயமாகி இருந்தனர்.
மேசை மீது வைத்திருந்த செயின், மொபைல்போன், பணம், வாசலில் நிறுத்தியிருந்த பைக்கையும் திருடிக் கொண்டு மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஜோதி முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

