வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை நபர் அதிரடி கைது
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை நபர் அதிரடி கைது
ADDED : செப் 16, 2026 05:52 PM
புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் தலைமை செயலகம் உள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு பேசிய நபர், அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் வெடிக்கும் என்று கூறினார்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், தீணையணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. மேலும், இது புரளி என்று உறுதியானது. இந்நிலையில், எந்த தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்ததோ அந்த எண்ணை போலீசார் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரித்தனர்.
அந்த எண் விழுப்புரம் அருகே இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று போலீசார் அங்கு விரைந்து சென்று, மொபைல் போனில் பேசிய நபரை புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்தனர்.
அவர், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சேஷ ஷைலாஷன், 40, என்பது தெரியவந்தது. இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.
