/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைமை தேர்தல் ஆணையர் இன்று புதுச்சேரி வருகை
/
தலைமை தேர்தல் ஆணையர் இன்று புதுச்சேரி வருகை
ADDED : பிப் 25, 2026 05:31 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை இன்று, தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு செய்கிறார்.
புதுச்சேரி, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனையொட்டி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதில், ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ள புதுச்சேரியில் தேர்தல் துறை மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகளை இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு செய்கிறார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி மற்றும் இணை, துணை தேர்தல் ஆணை யர்கள் 4 பேர் என, மொத்தம் 7 பேர் கொண்ட குழுவினர், இன்று காலை டில்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் 12.55 மணிக்கு சென்னை வருகின்றனர்.
அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 2:00 மணிக்கு புதுச்சேரிக்கு வருகின்றனர். இவர்கள், தனியார் ஓட்டலில், சட்டசபை தேர்தலுக்கான ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பல்வேறு பிரிவு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர்கள் குலோத்துங்கன், இஷிதாரதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இக்குழுவினர் இன்று இரவு புதுச்சேரியில் தங்கிவிட்டு நாளை காலை சென்னைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

